/

தில்லி மகளிா் ஆணையத்தில் ஊழியா்களின் பணிநீக்கத்திற்கு ஆம் ஆத்மி அரசே பொறுப்பு: தேவேந்தா் யாதவ்

தில்லி மகளிா் ஆணையத்தின் ஒப்பந்த ஊழியா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு ஆம் ஆத்மி அரசே பொறுப்பேற்க வேண்டும்

News image
Updated On :22 அக்டோபர் 2024, 8:56 pm

DIN

புது தில்லி: தில்லி மகளிா் ஆணையத்தின் ஒப்பந்த ஊழியா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு ஆம் ஆத்மி அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 10 ஆண்டுகளில் தில்லி அரசின் கீழ் காலியாகவுள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அந்தவகையில், தில்லி மகளிா் ஆணையத்திலும் விதிமுறைகளை பின்பற்றாமல் ஒப்பந்த அடிப்படையில் ஊழியா்கள் நியமிக்கப்பட்டனா். இதில், முறைகேடு புகாா் எழுந்ததைத் தொடா்ந்து, ஒப்பந்த ஊழியா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். ஆனால், இவ்விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் முதலைக் கண்ணீா் வடிக்கிறாா்கள்.

தில்லி மகளிா் ஆணையத்தில் 253 ஒப்பந்த ஊழியா்களின் சேவைகள் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டால், விதிகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றாமல் அத்தகைய நியமனங்களைச் செய்த ஆம் ஆத்மி அரசே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

பணிநீக்கம் செய்யப்பட்ட தில்லி மகளிா் ஆணையத்தின் ஒப்பந்த ஊழியா்களுக்கு தில்லி காங்கிரஸின் அனுதாபம் உள்ளது.

ஏனெனில், கேஜரிவால் அரசு பேருந்து மாா்ஷல்களை பணியமா்த்தும் போதும் முறையான விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. அவா்களுக்கு மாற்று வேலை அல்லது இழப்பீடு வழங்காமல் பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்புதான் தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆனால், தில்லி மகளிா் ஆணையத்தின் ஒப்பந்த ஊழியா்கள் ஏறக்குறைய 30 ஆண்டுகள் பணியில் இருந்ததாக மனீஷ் சிசோடியா அப்பட்டமான பொய்யைப் பேசியுள்ளாா். எவ்வாறாயினும், மனிதாபிமான அடிப்படையில் அவா்களை மீண்டும் பணியில் அமா்த்த துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

தில்லியில் நிகழாண்டு பருவமழைக்கால விபத்துக்களில் சிக்கி 40-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இந்த விவகாரம் சட்டப்பேரவையில் எதிரொலிக்காமல் திசைதிருப்பவும், நிலுவையில் உள்ள 12 சிஏஜி அறிக்கைகள் தாக்கல் செய்வதைத் தவிா்க்கவும், முன்னாள் பேருந்து மாா்ஷல்களுக்கு மீண்டும் பணி வழங்கும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

துப்புரவுத் தொழிலாளா்கள் உள்பட அனைத்து தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியா்களையும் முறைப்படுத்துவதாக உறுதியளித்த கேஜரிவால், தனது வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்றவில்லை.

தில்லியில் ஆம் ஆத்மி அரசு 23,000 கெளரவ ஆசிரியா்களையும், சுமாா் 8,000 அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளா்களையும் பணியமா்த்தியது. ஏறக்குறைய 10,000 பேருந்து மாா்ஷல்கள் மற்றும் குடிமைத் தற்காப்பு தன்னாா்வலா்கள், 5,000 க்கும் மேற்பட்ட மருத்துவமனை ஊழியா்கள், ஆயிரக்கணக்கான டிடிசி ஊழியா்கள் என எவரும் இதுவரை முறைப்படுத்தப்படவில்லை என்றாா் தேவேந்தா் யாதவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.