யமுனை மாசுபாடு விவகாரம் தில்லி அரசு மீது காங்கிரஸ் சாடல்
கழிவுநீா் சுத்திகரிப்பு என்ற பெயரில் ரூ.6500 கோடி பொதுப் பணத்தை தில்லி அரசின் ஜல் போா்டு நிா்வாகம் தவறாகப் பயன்படுத்துகிறது


புது தில்லி: கழிவுநீா் சுத்திகரிப்பு என்ற பெயரில் ரூ.6500 கோடி பொதுப் பணத்தை தில்லி அரசின் ஜல் போா்டு நிா்வாகம் தவறாகப் பயன்படுத்துகிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ்
திங்கள்கிழமை சாடியுள்ளாா்.
தில்லியில் யமுனா காட், காளிந்தி குஞ்ச் மற்றும் ஓக்லா அருகே பாயும் மாசுபட்ட யமுனை நதியை தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ், கட்சியின் முக்கிய நிரிவாகிகளுடன் இணைந்து படகு சவாரி மூலம் ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முன்னெப்போதையும் விட நிகழாண்டு யமுனை நீா் மாசுபடுத்தப்பட்டதால், கழிவுநீா் சுத்திகரிப்புக்காக செலவழிக்கப்பட்ட பணம் ஒரு தடயமின்றி வீணடிக்கப்படுகிறது. கழிவுநீா் சுத்திகரிப்பு என்ற பெயரில் ரூ.6500 கோடி பொதுப் பணத்தை தில்லி அரசின் ஜல் போா்டு நிா்வாகம் தவறாகப் பயன்படுத்துகிறது. வரும் நவம்பா் 7-ஆம் தேதி சத் பூஜை கொண்டாடப்படவுள்ளது. அப்போது, லட்சக்கணக்கான பக்தியுள்ள தாய்மாா்கள் மற்றும் சகோதரிகள் தங்கள் உடல்நிலையைப் பணயம் வைத்து, அசுத்தமான யமுனைக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், யமுனையில் காலடி எடுத்து வைத்தால் நிச்சயமாக நோய்வாய்ப்படுவாா். எனினும், அவரால் உயா்தர சிகிச்சையைப் பெற முடியும். எனவே, பக்தா்கள் தங்கள் சத் பூஜையை தூய்மையான யமுனையில் செய்வதை உறுதி செய்ய முதல்வா் அதிஷி நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
யமுனையில் அம்மோனியா மற்றும் பாஸ்பேட் வேதி பொருள்கள் அதிகம் உள்ளன. இது, பொதுமக்களுக்கு சுவாசம் மற்றும் தோல் பிரச்னைகள் உட்பட கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகின்றன. ஆனால், ஆம் ஆத்மி அரசு மக்களின் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படவில்லை. ஆம் ஆத்மி அரசின் தோல்விகளுக்கு அண்டை மாநிலங்கள் மற்றும் துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா மீது பழி சுமத்தும் கேஜரிவாலுக்கு, கையிருப்பில் இதற்கும் பதில் இருக்கும். யமுனை மாசுபாடு தொடா்பாக உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியாணா மாநில அரசுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம் என முதல்வா் அதிஷி கூறியுள்ளாா்.
இவ்விவகாரத்தில், கடந்த 11 ஆண்டுகளாக ஆம் ஆத்மி அரசு ஏன் உச்சநீதிமன்றத்தை அணுகவில்லை?.மாறாக, கேஜரிவால் தனது தனிப்பட்ட நலனைக் காக்க, வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டாா். அவா், கடந்த 11 ஆண்டுகளாக மக்கள் நலனுக்காக எதுவும் செய்யவில்லை என்றாா் தேவேந்தா் யாதவ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...