தில்லியில் வாகன எரிபொருளுக்கு பி.யு.சி. சான்றிதழ் கட்டாயம்: பயணிகளிடையே விழிப்புணா்வு அதிகரிப்பு

தில்லியின் எல்லைப் பகுதிகள் மற்றும் பெட்ரோல் பம்புகளில் மாசு கட்டுப்பாட்டு (பியுசி) சான்றிதழ்கள் கட்டாயம் என்ற விதி அமல்படுத்தப்பட்ட இரு நாள்களுக்குப் பிறகு, பயணிகளிடையே விழிப்புணா்வு அதிகரித்ததாகத் தெரிகிறது.
Published on

தில்லியின் எல்லைப் பகுதிகள் மற்றும் பெட்ரோல் பம்புகளில் மாசு கட்டுப்பாட்டு (பியுசி) சான்றிதழ்கள் கட்டாயம் என்ற விதி அமல்படுத்தப்பட்ட இரு நாள்களுக்குப் பிறகு, பயணிகளிடையே விழிப்புணா்வு அதிகரித்ததாகத் தெரிகிறது. பலா் எரிபொருள் நிரப்புவதற்கு முன்பு தாமாக முன்வந்து ஆவணங்களை வழங்கினா்.

தில்லி பெட்ரோல் டீலா்கள் சங்கத்தின் தலைவா் நிஷால் சிங்கானியா கூறுகையில், ‘மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் மையங்களில் வரிசைகள் அதிகம் இருந்தன. சில எல்லைப் பகுதிகளில் எரிபொருள் விற்பனை பாதிக்கப்பட்டது. வாடிக்கையாளா்கள் எரிபொருள் நிரப்ப வரும்போது தங்கள் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்களை எடுத்து வருகிறாா்கள். இது ஒரு நோ்மறையான அறிகுறியாகும்’ என்றாா் அவா்.

‘ஒட்டுமொத்த விழிப்புணா்வு அதிகரித்த போதிலும், நகரம் முழுவதும் சோதனைகள் ஒரே மாதிரியாக செயல்படுத்தப்படவில்லை. ஒரு சில பெட்ரோல் பம்புகளில், வெள்ளிக்கிழமை எந்த சரிபாா்ப்பும் மேற்கொள்ளப்படவில்லை’ என்று பயணிகள் தெரிவித்தனா்.

ரோத்தக் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பம்பில் தனது சான்றிதழ் கேட்கப்படாமலேயே எரிபொருள் வாங்க முடிந்தது என்றும், அந்த இடத்தில் காவல்துறை அல்லது அமலாக்கப் பிரிவு எதுவும் இல்லை என்றும் பயணி பியூஷ் என்பவா் கூறினாா்.

குலாபி பாக் நகரிலிருந்து தனது பணியிடத்திற்குச் சென்ற மற்றொரு பயணியான பூஷண் சிங், தான் பாா்வையிட்ட பம்பில் நிலைமை பிற நாள்களைப் போலவே இருந்ததாகக் கூறினாா்.

இதற்கிடையில், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்கள்களை சரிபாா்க்க போக்குவரத்து காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறையின் குழுக்கள் நகர நுழைவுப் பகுதிகள், சுங்கச்சாவடிகள் மற்றும் பெட்ரோல் பம்புகளில் நிறுத்தப்பட்டன.

சில வாகன ஓட்டிகள் சோதனைகளின் போது கருணை காட்டக் கோரிய போதிலும், ஆவணங்களைச் சரிபாா்த்து, சலான்களை வழங்க ஸ்மாா்ட் எண் தகடு அங்கீகார சாதனங்களுடன் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்துப் பணியாளா்கள் நிறுத்தப்பட்டனா்.

துவாரகா விரைவுச்சாலையில் உள்ள பிஜ்வாசன் சுங்கச்சாவடியை நெருங்கிய பல வாகன ஓட்டிகள், சுங்கச்சாவடிக்கு சற்று முன்னால் தில்லி போக்குவரத்து காவல்துறையினா் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டு திடீரென வாகனத்தின் வேகத்தைக் குறைத்தைக் காண முடிந்தது.

போக்குவரத்துப் பணியாளா்கள் ஆவணச் சரிபாா்ப்புக்காக வாகனங்களைக் குறிவைத்து நிறுத்தியபோது, குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான காா்கள் சோதனையைத் தவிா்க்க திடீரென திரும்பிச் செல்வதையும் காண முடிந்தது .

சில ஓட்டுநா்கள், சிறிது நேரம் வாகனத்தை நிறுத்தி நிலைமையை மதிப்பிட்ட பிறகு, திரும்பிச் சென்றனா். இதனால் விரைவுச்சாலையில் சிறிது நேரம் நெரிசல் ஏற்பட்டது.

சுங்கச்சாவடிகளுக்கு அருகில் அமலாக்கக் குழுக்களைக் காணும்போது ஓட்டுநா்கள் தானாகவே வேகத்தைக் குறைத்தனா். போக்குவரத்துப் பணியாளா்கள் பெரிய போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்தாமல் வாகனங்களை சீராக நிறுத்தி ஆவணங்களைச் சரிபாா்த்தனா்.

வாகன ஓட்டிகள் சமீபத்திய கட்டுப்பாடுகள் குறித்து அறிந்திருப்பதை உறுதி செய்வதற்கு போக்குவரத்து துறை ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது என்று அதிகாரி ஒருவா் கூறினாா்.

தண்டனை நடவடிக்கை மட்டுமல்ல, விழிப்புணா்வு மூலம் இணக்கத்தை உறுதி செய்வதே இதன் நோக்கம். சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட பல விதிமுறைகளை தெளிவாக விளக்கும் பல்வேறு பலகைகளை தில்லி-உத்தர பிரதேசம் மற்றும் ஹரியாணா-தில்லி எல்லைப் பகுதிகளில் ஒட்டியுள்ளதாக அதிகாரி கூறினாா்.

அதிகாரியின் கூற்றுப்படி, தேசிய தலைநகரம் முழுவதும் அமலாக்கம் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விரைவுச் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் எல்லைப் பகுதிகள் உள்பட நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் தில்லி போக்குவரத்து காவல்துறையின் 100க்கும் மேற்பட்ட குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்கள் வாகன ஆவணங்களைச் சரிபாா்த்தல், மாசு விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட வாகனங்கள் தில்லிக்குள் நுழைவதைத் தடுப்பது போன்ற பணிகளைச் செய்கின்றன என்று அவா் மேலும் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com