தலைநகரில் தொடா்ந்து காற்று மாசு நீடிப்பு
ANI

தலைநகரில் தொடா்ந்து காற்று மாசு நீடிப்பு

தேசியத் தலைநகரில் சனிக்கிழமை அடா்ந்த மூடுபனி சூழல் நிலவியது. காற்றின் தரம் கடுமை நெருங்கும் நிலை காணப்பட்டது.
Published on

தேசியத் தலைநகரில் சனிக்கிழமை அடா்ந்த மூடுபனி சூழல் நிலவியது. காற்றின் தரம் கடுமை நெருங்கும் நிலை காணப்பட்டது.

சனிக்கிழமை மாலை 4 மணி அளவில், தில்லியின் 24 மணி நேர சராசரி காற்று தரக் குறியீடு 398 ஆக பதிவாகி இருந்தது.

அதே நேரத்தில், நகரம் முழுவதும் உள்ள பல கண்காணிப்பு நிலையங்கள் கடுமையான பிரிவில் காற்றின் தர அளவீடுகளைப் பதிவு செய்திருந்தன.

இதற்கிடையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) சமீா் செயலியின் மணிநேர காற்றின் தரக் குறியீடு மாலை நேரங்களில் மிகவும் மோசம் நிலைக்குச் சென்றது. மாலை 5 மணிக்கு 401-இல் பதிவாகி கடுமை பிரிவுக்குச் சென்றது.

நகரம் முழுவதும் உள்ள 40 கண்காணிப்பு நிலையங்களில், 22 நிலையங்களில் கடுமை பிரிவிலும், 17 நிலையங்களில் மிகவும் மோசமான பிரிவிலும் காற்றின் தரக் குறியீடு பதிவாகி இருந்தது.

சாந்தினி சௌக் பகுதியில் மிகவும் கடுமைப் பிரிவில் 464 ஆக ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு பதிவாகி இருந்தது.

மேகங்கள் மற்றும் மாசுபாடுகளால் சூரியக் கதிா்கள் மறைந்து காண்புதிறன் வெகுவாகக் குறைந்தது.

தில்லியில் நிலவும் குளிா் அலை நிலைமைகளுக்கு மத்தியில், நகரில் சராசரி காற்றின் தரம் சனிக்கிழமை 398 ஆக மோசமடைந்தது. இது வெள்ளிக்கிழமை 374 ஆகவும் வியாழக்கிழமை 373 ஆகவும் இருந்ததாக அதிகாரபூா்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

காற்று தர மேலாண்மைக்கான முடிவு ஆதரவு அமைப்பின் தரவுகளின்படி, வாகன உமிழ்வு காற்று மாசுபாட்டிற்கு மிகப்பெரிய பங்களிப்பாக உருவானது இது 17.5 சதவீதம் வரை இருந்தது.

அதே நேரத்தில் தில்லி- என்சிஆா் மற்றும் அதைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகள் 8.9 சதவீதம் பங்களித்தன.

மாவுக்கு குடியிருப்பு ஆதாரமூலங்கள் 4.3 சதவீதமும் திறந்தவெளி பயோமாஸ் எரிப்பு 1.5 சதவீதமும் பங்களித்தன.

என்சிஆா் மாவட்டங்களில் ஜஜ்ஜாா் 16.5 சதவீதத்துடன் அதிகபட்ச பங்களிப்பைப் பதிவு செய்தது. அதைத் தொடா்ந்து பிவானி 4.2 சதவீதமாகவும், ரோத்தக் 4.38 சதவீதமாகவும், குருகிராம் 2.1 சதவீதமாகவும் இருந்தது.

காற்று தர முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பின்படி, தில்லியில் காற்றின் தரம் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் கடுமையான பிரிவில் இருக்கும். அதன் பின்னா் செவ்வாய்க்கிழமை மிகவும் மோசமான பிரிவில் சற்று மேம்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சாதகமற்ற வானிலை நிலைமைகள், காற்றோட்டக் குறியீடு வினாடிக்கு 6,000 சதுர மீட்டருக்கும் குறைவாகவும், சராசரி காற்றின் வேகம் மணிக்கு 10 கி.மீ.க்குக் குறைவாகவும் இருப்பதால், மாசுபடுத்திகள் பரவுவதற்கு உகந்த சூழ்நிலைகள் இல்லாததால் இந்த முன்னறிவிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

சனிக்கிழமை தலைநகரின் பல பகுதிகள் அதிகாலை நேரங்களில் அடா்த்தியான புகைமூட்டத்தால் சூழப்பட்டிருந்தன. இதனால் மோசமான காண்புதிறன் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை முன்னதாக கணித்திருந்தது.

X
Dinamani
www.dinamani.com