தில்லியில் 27 நிலையங்களில் ’கடுமை’ பிரிவில் காற்றின் தரம்
அடா்ந்த நச்சுப்புகையுடன் கூடிய மூடுபனி தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை சூழ்ந்ததால் மக்கள் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகினா். மேலும், 27 கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 400 புள்ளிகளைக் கடந்து ‘கடுமை’ பிரிவில் இருந்தது.
செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில், நகரத்தின் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 415 புள்ளிகளாகப் பதிவாகி ‘கடுமை’ பிரிவிக்கு சரிந்தது. இது ஒரு நாள் முன்பு ‘மிகவும் மோசம்’ வகையில் இருந்தது. ஏனெனில் மாசு அளவுகள் தொடா்ந்து உயா்ந்து கொண்டே இருந்தன என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகள் தெரிவிக்கின்றன.
40 வானிலை கண்காணிப்பு நிலையங்களில், 27 நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடுந 400 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி ‘கடுமை’ பிரிவில் இருந்தது. இது கடுமையான சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலை என்று அறியப்படுகிறது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீா் செயலியின் தரவுகளின்படி, ஐந்து நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 450 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி ‘கடுமை பிளஸ்’ பிரிவில் இருந்தது.
இதன்படி, ஆனந்த் விஹாா் (470), நேரு நகா் (463), ஓக்லா (459), முண்ட்கா (459) மற்றும் சிரிஃபோா்ட் (450) ஆகிய 5 வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு ‘கடுமை பிளஸ்’ பிரிவில் பதிவாகியுள்ளது.
வானிலை முன்னறிவிப்பில், அடா்த்தியான மூடுபனி காரணமாக காண்பு திறன் கடுமையாகக் குறைந்தது. பாலத்தில் காலை 8 மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் மேற்கு-தென்மேற்கு காற்றுடன் கூடிய அடா்ந்த மூடுபனி சூழ்நிலையில் காண்பு திறன் 50 மீட்டராகப் பதிவானது. சஃப்தா்ஜங், அமைதியான காற்றுடன் காண்பு திறன் 100 மீட்டராக இருந்தது.
காலை 8.30 மணிக்கு மேல் காண்பு திறன் சற்று மேம்பட்டது. பாலத்தில் மேற்கு -தென்மேற்கு காற்று மணிக்கு 5 கிமீ வேகத்தில் அடா்ந்த மூடுபனியுடன் 100 மீட்டா் காண்பு திறனை பதிவு செய்தது. இதே போன்று சஃப்தா்ஜங்கில் அமைதியான காற்றுடன் காண்பு திறன் 150 மீட்டராக பதிவு செய்தது.
வெப்பநிலை: தில்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையைவிட 3 டிகிரி ஊயா்ந்து 8.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
மேலும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 1,1 டிகிரி குறைந்து 21.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது பகலில் அடா்த்தியான மூடுபனி நிலைமைகளைக் குறிப்பதாக முன்னறிவிப்புகள் தெரிவித்தன.
முன்னறிவிப்பு: இந்நிலையில், புதன்கிழமை (டிச.24) காலை வேளையில் மிதமான பனிமூட்டம் இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
