தில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு!

தில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டது பற்றி...
ரேகா குப்தா
ரேகா குப்தா PTI
Published on
Updated on
1 min read

தில்லி முதல்வராக பாஜகவின் ரேகா குப்தா வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ரேகா குப்தாவுக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

அண்மையில் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 இடங்களில் வென்ற பாஜக, ஆம் ஆத்மியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியமைத்துள்ளது.

தில்லி முதல்வரையும் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவரையும் தேர்ந்தெடுக்கும் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில், தில்லி முதல்வராக ரேகா குப்தா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, தில்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டார்.

சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித், அதிஷி ஆகியோருக்குப் பிறகு நான்காவது பெண் முதல்வர் என்கிற பெருமையை ரேகா குப்தா பெற்றுள்ளார்.

தில்லி அமைச்சர்களாக பர்வேஷ் வர்மா, ஆஷிஷ் சூட், மஞ்சிந்தர் சிங் சிர்ஷா, ரவீந்தர் இந்தரராஜ் சிங், கபில் மிஸ்ரா மற்றும் பங்கஜ் குமார் சிங் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். பர்வேஷ் வர்மா துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பதவியேற்பு நிகழ்வில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

முதல்வராகும் "முதல் முறை' எம்எல்ஏ

ரேகா குப்தா (50) தனது அரசியல் வாழ்வை மாணவர் அரசியலில் தொடங்கி படிப்படியாக முன்னேறியுள்ளார். தௌலத் ராம் கல்லூரியில் படித்தபோது அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் இருந்த இவர், 1994-95 ஆண்டில் அக்கல்லூரியின் மாணவர் சங்கச் செயலராகவும், 1995-96 ஆண்டில் தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் செயலராகவும், 1996 - 97 ஆண்டில் பல்கலை. மாணவர் சங்கத் தலைவராகவும் ஆனார்.

2003 - 2004 வரை தில்லி பாஜக இளைஞரணிச் செயலர், 2004 - 2006 வரை கட்சியின் தேசிய செயலர் பதவி வகித்த இவர், 2007-இல் வடக்கு பீதம்புராவின் கவுன்சிலரானார். 2007 - 2009 வரை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மகளிர் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் குழுவின் தலைவராகவும், 2009-இல் தில்லி பாஜக மகளிர் அணி பொதுச் செயலராகவும் இருந்தார். 2010, மார்ச் மாதம் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரானார். 2023, பிப்ரவரியில் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராயிடம் தில்லி மேயர் தேர்தலில் தோல்வியடைந்தார்.

அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஷாலிமார் பாக் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வந்தனா குமாரியை வீழ்த்தி எம்எல்ஏ ஆனார் ரேகா குப்தா. இவருக்கு தொழிலதிபர் மணீஷ் குப்தா என்ற கணவரும், மகன் நிகுஞ்ச், மகள் ஹர்ஷிதா குப்தாவும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com