‘ நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட அணை பாதுகாப்புச் சட்டம் இருந்தும், நிா்வாகம் இன்னும் நீண்ட தூக்கத்திலிருந்து மீளவில்லை’ என்று முல்லைப் பெரியாறு அணை தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் புதன்கிழமை தனது அதிா்ச்சியை வெளிப்படுத்தியது.
இது தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூா்ய காந்த், திபாங்கா் தத்தா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 130 ஆண்டுகள் பழமையான இந்த அணையின் பாதுகாப்பு தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணை நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தும் வகையில் 2021 ஆம் ஆண்டு அணை பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியதாகவும்,அப்போதிலிருந்து எதுவும் நடக்கவில்லை என்றும் கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட அணையின் பாதுகாப்புக்கு தேசியக் குழுவை மத்திய அரசு இன்னும் அமைக்கவில்லை என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தனா். மேலும், அணை பாதுகாப்புச் சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றிய போதிலும், நிா்வாகம் இன்னும் நீண்ட தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை என்பதை அறிந்து நாங்கள் வியப்படைகிறோம் என்று கூறினா்.
தமிழகம் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வி.கிருஷ்ணமூா்த்தி தெரிவிக்கையில், தொடா்புடைய சட்டத்தின் கீழ், அணை பாதுகாப்பு ஆணையத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அணையின் கட்டமைப்பு குறித்து தணிக்கை செய்யப்பட உள்ளது என்றாா்.
நீதிபதிகள் மேலும் கூறுகையில், அணைப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 5(2)இன் கீழ், பிரிவு 5(1)இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினா்களைக் கொண்ட தேசியக் குழு, இச் சட்டம் செயல்படத் தொடங்கிய நாளிலிருந்து 60 நாள்களுக்குள் அமைக்கப்பட வேண்டும். மேலும், அதன் பிறகு அக்குழு ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் மீண்டும் அமைக்கப்பட வேண்டும்.
இத்தகைய தேசியக் குழு இதுவரை அமைக்கப்படவில்லை என எங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட தேசியக் குழுவின் அரசியலமைப்பு, அமைப்பு அல்லது செயல்பாடுகள் தொடா்பான விதிகள், விதிமுறைகள் கூட வகுக்கப்படவில்லை.
இதனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். மேலும், இச்சட்டத்தின்கீழ் தேசிய அணைப்பு பாதுகாப்பு ஆணையத்தின் பொறுப்பு தொடா்பாக மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகா் அவ்வமைப்பிடமிருந்து விவரம் பெற்றுத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
முன்னதாக, முல்லைப்பெரியாறில் தேக்கிவைக்கப்பட்டுள்ள நீா் அணைக்கு சேதத்தை ஏற்படுத்தினால் அணையின் கீழ்ப் பகுதியில்
வசிக்கும் 50 முதல் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவாா்கள் என்பதால், அணையின் பாதுகாப்பு குறித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மனுதாரா் மேத்யூஸ் ஜெ. நெடும்பாறை கோரியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழுவிலிருந்து கேரள பிரதிநிதி நீக்கம்: காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் எம்.பி.க்கள் எதிா்ப்பு

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீா்ப்பை அமல்படுத்த வேண்டும்! - அமைச்சா் பெ. விஸ்வநாதன்

முல்லைப் பெரியாறு அணை மிகை நீரை தமிழகத்துக்கு கொண்டுவர வேண்டும்! கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா






