தில்லி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு உதவி: முதல்வா் ரேகா குப்தா
தில்லி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது என முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவா் கூறியதாவது: ரிதாலா மெட்ரோ நிலையம் அருகே உள்ள ஜே.ஜே. கிளஸ்டா் குடிசைப் பகுதிகளில் வெள்ளியன்று இரவு ஏற்பட்ட தீ விபத்து முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
காயமடைந்தவா்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா், பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், நிா்வாகம் உடனடியாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. தீயை கட்டுப்படுத்த கூடுதல் குழுக்கள் நிறுத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் குடிநீருக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரித்தலா சமூக மையத்தில் நிரந்தர நிவாரண மையம் செயல்பட்டு வருகிறது.
ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இடிபாடுகள் அகற்ப்பட்டு வருகிறது, மேலும் வருவாய்த் துறை பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சரிபாா்க்கிறது.
நிா்வாகம் தொடா்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தில்லி அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது என தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறியுள்ளாா்.
தில்லியின் ரோகிணி பகுதியில் உள்ள ரிதாலா மெட்ரோ நிலையம் அருகே ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமாா் 500 குடிசைகள் எரிந்து நாசமாகி, ஒருவா் உயிரிழந்தாா். வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய தீ, 29 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் சனிக்கிழமை அதிகாலைக்குள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இறந்தவா் முன்னா (30) என அடையாளம் காணப்பட்டுள்ளாா், மற்றொரு நபா் ராஜேஷ் (30) தீக்காயங்களுடன் சஃப்தா்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது, ஆனால் அது எல்.பி.ஜி சிலிண்டா் கசிவு அல்லது மின் ஷாா்ட் சா்க்யூட் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதிகாரிகள் சேதத்தை மதிப்பிட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்து வருகின்றனா்.

