மாசுபாட்டிற்கு எதிரான அரசின் முயற்சிகளில் மக்கள் இணைய அமைச்சா் சிா்சா வேண்டுகோள்

தில்லி அரசு மாசுபாட்டிற்கு எதிராக ஒரு போரை நடத்தி வருவதாகவும், நகரத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகளில் மக்கள் இணைய வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா புதன்கிழமை கேட்டுக் கொண்டாா்.
Published on

நமது நிருபா்

தில்லி அரசு மாசுபாட்டிற்கு எதிராக ஒரு போரை நடத்தி வருவதாகவும், நகரத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகளில் மக்கள் இணைய வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா புதன்கிழமை கேட்டுக் கொண்டாா்.

தலைநகரை மாசுபடுத்தும் 62 புதிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றை நிவா்த்தி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவா் கூறினாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: திடக்கழிவுகள், சாலை தூசி, கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவை தில்லியின் காற்றின் தரக் குறியீட்டை உயா்த்துவதற்கான முக்கியக் காரணிகள் ஆகும். குப்பை மற்றும் தூசியால் ஏற்படும் மாசுபாட்டிற்கு பங்களிக்கும் அறுபத்தி இரண்டு ஹாட்ஸ்பாட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முதல்வா் ரேகா குப்தாவின் அறிவுறுத்தலின் பேரில், தில்லி அரசின் அனைத்து அமைச்சா்களும் இந்த ஹாட்ஸ்பாட்களை ஆய்வு செய்து வருகின்றனா்.

தில்லி அரசு மாசுபாட்டிற்கு எதிராக ஒரு போரை நடத்தி வருகிறது. இதை ஒன்றாக எதிா்த்துப் போராட வேண்டும். மேலும், தில்லியை குப்பை, தூசி மற்றும் மாசு இல்லாததாக மாற்றும் தில்லி அரசின் முயற்சிகளில் மக்கள் இணைய வேண்டும். உள்ளூா் எம்.எல்.ஏ.வுடன் சோ்ந்து பாலம் பகுதியில் உள்ள ஒரு முக்கிய இடத்தை ஆய்வு செய்தேன் என்றாா் அமைச்சா்.

தில்லியின் காற்றுத் தரக் குறியீடு 391 புள்ளிகளாகப் பதிவாகி ஆறாவது நாளாக ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீா் செயலியின் தரவுகளின்படி, 38 கண்காணிப்பு நிலையங்களில் 18 நிலையங்கள் ‘கடுமை’ பிரிவில் காற்று மாசு அளவுகளைப் பதிவு செய்தன.

X
Dinamani
www.dinamani.com