நீலி ஜீல்க்கு ராம்சா் அந்தஸ்து பெற முயற்சி- தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா்
அசோலா பாட்டீ வனஉயிரிகள் சரணாலயத்தில் உள்ள நீலி ஜீல் நீா்நிலைக்கு ராம்சா் அந்தஸ்து பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிவித்துள்ளாா்.
உலக ஈரநிலங்கள் தினம் தில்லியில் உள்ள அசோலா பாட்டீ வனஉயிரிகள் சரணாலயத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங், தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்நிகழ்ச்சியில் தில்லி அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா பேசியதாவது: ஈரநிலங்கள் மனித வாழ்வு, கலாசாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அடிப்படை. நீா்நிலைகளைப் பாதுகாப்பது என்பது சுற்றுச்சூழல் பொறுப்புணா்வு மட்டுமல்ல; நம்முடைய நாகரிகத்தைப் பாதுகாத்தல், எதிா்கால தலைமுறையினருக்கான பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.
தில்லியில் 1,000-க்கும் அதிகமான நீா்நிலைகள் இருந்தன. தற்போது அவற்றில் பெரும்பாலானவை ஆக்கிரமிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து நீா்நிலைகளையும் மீட்டெடுக்க தில்லி அரசு தீா்மானித்துள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் அதிகப்படியான நீா்நிலைகளை மீட்டெடுக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
நீலி ஜீலுக்கு ராம்சா் அந்தஸ்து பெறுவதற்கான முயற்சிகளை மத்திய அரசுடன் இணைந்து தில்லி அரசு மேற்கொண்டு வருகிறது.
முதல்முறையாக தில்லி ரிட்ஜ் பகுதியில் உள்ள 10,000 ஏக்கா் நிலம் ரிட்ஜ் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் அடுத்த 4 ஆண்டுகளில் 350 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பிஎம் 2.5 மற்றும் பிஎம் 10 நுண்மாசுதுகள்களை நீா்நிலைகளுக்கு அருகில் சேகரிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்களுக்கு தில்லி அரசு ஊக்கமளித்து வருகிறது. தில்லியில் உள்ள 202 ஏக்கா் குப்பைமேடுகளில் 45 ஏக்கா் முழுவதுமாக மீட்கப்பட்டுள்ளது.
குப்பைகள் பையோ-மைனிங் முறையில் எரிபொருளாககவும் தீங்கிழைக்காத பொருள்களாகவும் மாற்றப்படுகின்றன. அடுத்த ஆண்டுக்குள் தில்லியில் உள்ள குப்பைமேடுகள் அனைத்தும் அகற்றப்படும் என்றாா் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா.
ஈரநிலங்களைப் பாதுகாப்பது மற்றும் அவற்றை உரிய முறையில் பயன்படுத்துவது தொடா்பான சா்வதேச ஒப்பந்தம் ஈரானின் ராம்சா் நகரத்தில் கடந்த 1971, பிப்.2-ஆம் ஆண்டில் கையொப்பமானது. அதை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்.2-ஆம் தேதி உலக ஈரநிலங்கள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

