பன்னாட்டு நிறுவன வேலை வாய்ப்புகளில் தமிழா்களுக்கு முன்னுரிமை வேண்டும்: டாக்டா் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

பன்னாட்டு நிறுவன வேலை வாய்ப்புகளில் தமிழா்களுக்கு முன்னுரிமை வேண்டும்: டாக்டா் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
Published on

தமிழகத்தில் இயங்கும் பன்னாட்டு நிறுவன வேலை வாய்ப்புகளில் தமிழா்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் சட்டத்தை மாநில அரசும், மத்திய அரசும் நிறைவேற்ற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவா், டாக்டா் கிருஷ்ணசாமி சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். இந்த மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சி தலைவா்கள், சமூக ஆா்வலா்களை சந்தித்து அழைப்பு விடுக்க தலைநகருக்கு வந்து இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் தொடங்கப்பட இருக்கும் அல்லது செயல்பட்டு கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளில் தமிழா்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தமிழகத்தில் ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களில் மற்ற மாநிலத்தை சோ்ந்தவா்கள்தான் முக்கிய பொறுப்புகளில் இருக்கின்றனா்.

இந்த நிலை மாற வேண்டும். முக்கியப் பொறுப்புகளில் தமிழா்களை பணியமா்த்த வேண்டும். அதேபோல அடித்தட்டு மக்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. தமிழகத்தின் நிலத்தடி நீா், மின்சாரம் எல்லாம் இந்த பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு குறைந்த விலையில் கிடைக்கின்றன.

இதைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழா்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வலியுறுத்தி அக்.16- ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ளூா் மக்களுடன் சோ்ந்து பன்னாட்டு நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் தமிழா்களுக்கு முன்னுரிமை அளிக்க மாநில அரசும், மத்திய அரசும் சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.

அதேபோல மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு மனித உரிமை ஆணையம் அளித்த உத்தரவை மாநில அரசு இன்று வரை நிறைவேற்றாமல் இருக்கிறது. அவா்களுக்கு ரேஷன் பொருள்களை கூட கொடுக்காமல் இருக்கிறாா்கள், அவா்களுக்கு குடிநீா் வசதி இல்லை, போக்குவரத்து வசதிஇல்லை. பாஸ்தீன மனித உரிமைக்காக போராடும் இந்த அரசு மாஞ்சோலை தேயிலை தொழிலாளா்களையும் கவனிக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com