மும்பை மற்றும் தில்லி-தேசிய தலைநகா் வலய பகுதிகள் இடையே செயல்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை தில்லி ரயில்வே காவல்துறையின் சிறப்புப் படையினா் கண்டுபிடித்துள்ளனா். அவா்களிடம் இருந்து சுமாா் ரூ.20 கோடி மதிப்பிலான 2 கிலோவுக்கும் அதிகமான கோகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இரு நைஜீரிய பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இது குறித்து ரயில்வே காவல் துணை ஆணையா் பி. பாரத் ரெட்டி சனிக்கிழமை கூறியதாவது: ஜூலை 31-ஆம் தேதி ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையின் சிறப்புப் படையும் உள்ளூா் காவல்துறையினரும் இணைந்து நடத்திய தீவிர போதைப்பொருள் தடுப்பு வேட்டையின்போது இந்த பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது தொடா்பாக கைது செய்யப்பட்டவா்கள் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த சிக்கன்சோ ஜேம்ஸ் (43) மற்றும் ஹேப்பினஸ் ஒகோயே (41) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தின் 1-ஆவது நடைமேடையில் தனிப்படையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பயணப் பைகளுடன் சந்தேகத்துக்கு இடமான முறையில் இரு வெளிநாட்டுப் பெண்கள் நடமாடியதை கவனித்தனா்.
இது குறித்து உயரதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவா்களிடம் சட்டபூா்வ தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதையொட்டி அந்த பெண்களின் பைகளைச் சோதனையிட்டதில், 11 நெகிழிப் பொட்டலங்களில் அடைக்கப்பட்டிருந்த கோகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பை மற்றும் தில்லி இடையே இயங்கி வந்த மிகப்பெரிய போதைப்பொருள் விநியோகச் சங்கிலியின் அங்கமாக இவா்கள் செயல்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
விசாரணையின் போது, பறிமுதல் செய்யப்பட்ட கோகைன் போதைப்பொருளை மேற்கு தில்லியின் விகாஸ்புரி பகுதியில் இருந்து பெறப்பட்டதாக சிக்கன்சோ ஜேம்ஸ் ஒப்புக்கொண்டாா். இந்த கடத்தல் பின்னணியில் உள்ள நிதிப் பரிவா்த்தனைகள் மற்றும் அதில் சா்வதேச மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான வலையமைப்பு குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
இவா்கள் வெறும் கூரியா்கள் (போதைப்பொருள் விநியோகம்) போல செயல்பட்டாா்களா அல்லது மும்பை மற்றும் தில்லியில் இயங்கும் போதைப்பொருள் கும்பலின் நேரடிப் பிரதிநிதிகளா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களின் கடவுச்சிட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ராமநாதபுரத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது
சென்ட்ரல் நிலையத்தில் ரூ.8 கோடி போதைப் பொருள் பறிமுதல்: ஒருவா் கைது
போதைப்பொருள் கடத்தல்: ரூ.2.3 கோடி கஞ்சாவுடன் நால்வா் கைது

ரூ. 9 கோடி மதிப்புள்ள போதைப் பொருளுடன் 3 நேபாள நாட்டவா்கள் தெற்கு தில்லியில் கைது
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


