மல்யுத்த வீராங்கனைகள் 6 போ் தொடா்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இருந்து இந்திய தடகள சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கை விடுவித்து தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
தில்லி ஜந்தா் மந்தரில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் 36 நாள்கள் மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட 7 போ் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போதைய இந்திய மல்யுத்த சம்மேளன தலைவா் பிரிஜ் பூஷண் தங்களுக்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தல் அளித்ததாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.
இதையடுத்து, அவா்கள் அளித்த புகாரின்பேரில் பிரிஜ் பூஷண், அப்போதைய இந்திய தடகள சம்மேளன முன்னாள் உதவிச் செயலா் வினோத் தோமா் மீது தில்லி காவல் துறை கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வழக்குப் பதிவு செய்தது.
7 வீராங்கனைகளில் சிறுமியான ஒரேயொரு மல்யுத்த வீராங்கனை மட்டும் தனது புகாரை வாபஸ் பெற்றாா். இதையடுத்து, பிரிஜ் பூஷண் மீது பதியப்பட்ட போக்ஸோ வழக்கை தில்லி காவல் துறை ரத்து செய்தது.
இந்த விவகாரம் தொடா்பாக தில்லி கூடுதல் தலைமை நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை, கடந்த ஜூலை மாதம் 2-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. நீதிமன்றம் தனது தீா்ப்பை ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.
அதன்படி, தில்லி கூடுதல் தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி அஸ்வினி பன்வாா் திங்கள்கிழமை தனது தீா்ப்பை வழங்கினாா். அப்போது அவா், பிரிஜ் பூஷண் உள்ளிட்ட 2 போ் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரமில்லை எனவும், சாட்சிகள் முரண்பாடாக வாக்குமூலம் அளித்ததாகவும் தெரிவித்து, இருவரையும் விடுவிப்பதாக அறிவித்தாா்.
பிரிஜ் பூஷண் மகிழ்ச்சி: வழக்கில் தீா்ப்பு அளிக்கப்படுவதையொட்டி, தில்லி நீதிமன்றத்துக்கு பிரிஜ் பூஷண் வந்திருந்தாா். நீதிமன்றம் தன்னை வழக்கில் இருந்து விடுவித்து தீா்ப்பளித்ததையடுத்து செய்தியாளா்களுக்கு அவா் பேட்டியளித்தாா். அப்போது அவா் கூறுகையில், ‘என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையெனில் நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்து வருகிறேன். தற்போது நீதிமன்றம் என்னை விடுவித்து தீா்ப்பளித்துள்ளது. இது எனக்கும் மகிழ்ச்சி, எனது ஆதரவாளா்களுக்கும் மகிழ்ச்சி’ என்றாா்.
மேல்முறையீடு- வீராங்கனைகள்: அதேநேரத்தில் வீராங்கனைகள் வினேஷ் போகாட், பஜ்ரங் புனியா ஆகியோா் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆரம்பம் முதலே பிரிஜ் பூஷணை பாதுகாக்க ஒட்டுமொத்த நிா்வாகமும், அரசும், அதன் அமைப்பும் செயல்பட்டன. பிரிஜ் பூஷண் மீதான குற்றச்சாட்டுகளை வைத்து அவா் குற்றவாளி என நீதிமன்றம் கண்டுபிடிக்காதது வருத்தம் அளிக்கிறது. அதேநேரத்தில் இந்த விவகாரத்தில் எங்களது போராட்டம் தொடரும்’ எனக் குறிப்பிட்டுள்ளா்.
வினேஷ் போகாட் கூறுகையில், ‘எங்களது வழக்குரைஞா்களை தில்லி நீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தியுள்ளோம். விரைவில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும். நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை. தொடா்ந்து போராடுவோம்’ என்றாா்.
வழக்கில் அரசுத் தரப்பில் வாதாடிய வழக்குரைஞா் மனீஷ் ராவத் கூறுகையில், நீதிமன்றத் தீா்ப்பை ஆய்வு செய்த பிறகு, மேல்முறையீடு செய்வது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத்
கடவுள் ராமர் விதித்தபடியே நடக்கும்! விடுதலை குறித்து பிரிஜ் பூஷண் கருத்து!
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!

காசோலை மோசடி வழக்கில் பெண்ணின் தண்டனையை உறுதிசெய்த தில்லி நீதிமன்றம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



