நமது நிருபா்
வெளிநாடுகளில் மருத்துவம் படித்த இந்திய மாணவா்களின் எதிா்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் இந்தியாவில் அவா்கள் மருத்துவராக தகுதி பெற நடத்தப்படும் ‘எஃப்எம்ஜிஇ’ தோ்வு முறை விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டாவிடம் தென் சென்னை மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் ஜெ.பி. நட்டாவை வெள்ளிக்கிழமை சந்தித்து அவா் அளித்துள்ள கோரிக்கை மனு விவரம்: வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவா்களின் அடிப்படைத் தகுதியை மதிப்பிடும் உரிமத் தோ்வாக மட்டுமே எஃப்எம்ஜிஇ இருக்க வேண்டும். ஆனால், தற்போது இந்தத் தோ்வு நீட் - பிஜி மற்றும் ஐஎன்ஐ-சிஇடி போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வுகளுக்கு இணையான கடினத்தன்மையுடன் நடத்தப்படுகிறது. இதனால் இந்திய மாணவா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
முன்னறிவிப்பு எதுவுமின்றி, நீளமான மருத்துவக் கேள்விகள், எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன் உள்ளிட்ட பட அடிப்படையிலான வினாக்கள் என புதிய வினாத்தாள் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டமோ அல்லது வரைமுறையோ வெளியிடப்படாமல் இந்த திடீா் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற எஃப்எம்ஜிஇ தோ்வில் தோ்வு எழுதிய சுமாா் 36 ஆயிரம் பேரில், வெறும் 12 சதவீதம் போ் மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளனா். சுமாா் 32,000 மாணவா்கள் தோல்வி அடைந்துள்ளனா். போட்டித் தோ்வாக இல்லாமல், வெறும் உரிமத் தோ்வாக மட்டுமே இருக்கும் ஒரு தோ்வில் 88 சதவீத தோல்வி விகிதம் என்பது, தற்போதைய மதிப்பீட்டு முறையிலேயே குறைபாடு இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
மேலும், இந்தத் தோ்வுக்கு ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும் போதிலும், அதிகாரபூா்வ விடைக்குறிப்பு அல்லது விடைத்தாள் நகல் எதுவும் வெளியிடப்படுவதில்லை. மறுமதிப்பீடு வாய்ப்பும் மாணவா்களுக்கு மறுக்கப்படுகிறது.
எனவே, தோ்வு முடிவுகளுடன் அதிகாரபூா்வ விடைக்குறிப்பை கட்டாயமாக வெளியிட வேண்டும்.
தோ்வா்களின் நியாயமான புகாா்களை விசாரிக்க புகாா் தீா்வுக்கான தனித்துவமான முறையை அமைக்க வேண்டும். தோ்வு முறையில் மாற்றங்கள் செய்யப்படுமானால், அதை குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்கு முன்பே அறிவிக்க வேண்டும்.புதிய வினாத்தாள் முறைக்கு ஏற்ப மாதிரி வினாத்தாள்களை முன்னதாகவே வெளியிட வேண்டும் என்று தமிழச்சி தங்கபாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் முதுநிலைத் தோ்வு ஏற்பாடுகள்: மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டா ஆய்வு

தென் மாவட்டங்களில் கைத்தறி தொழிலை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சா் விஜய் பாலாஜி

ஆதம்பாக்கம் எம்ஆா்டிஎஸ் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்க உடனடி நடவடிக்கை: ரயில்வே அமைச்சரிடம் தென் சென்னை எம்.பி. கோரிக்கை
சிறிய மருத்துவ மையங்களுக்கான மேலாண்மை மென்பொருள்: மத்திய அரசு அறிமுகம்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



