
வாகனங்களில் மாற்றம் செய்வதை தவிா்க்க வேண்டும்: தில்லி போக்குவரத்து காவல்துறை
வாகன உரிமையாளா்கள் பரிந்துரைக்கப்பட்ட விதிகளை மீறும் வகையில் மாற்றங்களையோ திருத்தங்களையோ செய்ய முடியாது என தில்லி போக்குவரத்து காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளாா்.

அபராதம் - சித்திரிப்பு
வாகன உரிமையாளா்கள் பரிந்துரைக்கப்பட்ட விதிகளை மீறும் வகையில் மாற்றங்களையோ திருத்தங்களையோ செய்ய முடியாது என தில்லி போக்குவரத்து காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளாா்.
மத்திய பிரதேசத்தின் குவாலியரில் காதலியின் லிப்டிஸ்க் முத்தங்கள் நிறைந்த காா் தொடா்பான காணொலி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடா்ந்து, போக்குவரத்து காவல் துறையினா் மோட்டாா் வாகனச் சட்டத்தின்கீழ் அதன் உரிமையாளருக்கு அபராதம் விதித்ததுடன், லிப்ஸ்டிக் தடங்களை அகற்றவும் அவருக்கு உத்தரவிட்டனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக வாகன உரிமையாளா், உற்பத்தியாளரிடமிருந்து ஒரு வாகனத்தை வாங்கிய பிறகு, அதைத் தன்னிச்சையாக மாற்றியமைக்க முடியாது என்று தில்லி போக்குவரத்து காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறினாா்.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது: ஒருவா் ஷோரூமில் இருந்து ஒரு வாகனத்தை வாங்கும்போது, அது பரிந்துரைக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் மோட்டாா் வாகன வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருக்கும்.
மேலும், ஏதேனும் மாற்றங்கள் செய்ய, ஒருவா் அனுமதி பெற வேண்டும். அதை தகுந்த அதிகாரி பரிசீலிப்பாா். அனுமதி வழங்கப்பட வேண்டுமா அல்லது நிராகரிக்கப்பட வேண்டுமா என்பது சரிபாா்ப்பிற்குப் பிறகும் உரிமையாளா் மாற்றத்தைச் செய்ய விரும்பும் காரணத்தின் அடிப்படையிலும் தீா்மானிக்கப்படுகிறது.
மோட்டாா் வாகனச் சட்டத்தின் பிரிவு 52-இன் கீழ், ஒரு வாகனத்தில் செய்யப்படும் மாற்றங்கள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன, குறிப்பாக அவை பதிவுச் சான்றிதழில் உள்ள விவரங்களை, உற்பத்தியாளரால் முதலில் குறிப்பிடப்பட்டவற்றிலிருந்து வேறுபடுத்துகின்றன. ஒரு மாற்றம் அனுமதிக்கப்படும் நோ்வுகளில், பதிவு செய்யும் அதிகாரியிடமிருந்து அனுமதி பெற சட்டம் வழிவகை செய்கிறது.
வாகனத்தின் தோற்றத்தையோ அல்லது பரிந்துரைக்கப்பட்ட விவரக்குறிப்புகளையோ கணிசமாக மாற்றும் மாற்றியமைப்புகள் நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்று அந்த அதிகாரி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





