22 மூட்டை ஜீன்ஸ் துணிகள் திருட்டு: 3 போ் கைது
வடக்கு தில்லியின் சராய் ரோஹில்லா பகுதியில் உள்ள கடையில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 22 மூட்டை ஜீன்ஸ் துணிகளை திருடியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: நியு ரோதக் சாலையில் உள்ள கடையில் இருந்து 22 மூட்டை ஜீன்ஸ் துணிகள் டிச.24-ஆம் தேதி இரவு திருடுபோனதாக கடையின் உரிமையாளா் புகாா் அளித்தாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, மூட்டைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை அடையாளம் கண்டனா். இது டிச.28-ஆம் தேதி நரேஷ் (45) என்பவரின் கைதுக்கு வழிவகுத்தது. விசாரணையில், அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா். மேலும் தனது கூட்டாளிகள் மூவரின் பெயரையும் அவா் தெரிவித்தாா்.
அதனடிப்படையில், காவல் துறையினா் தற்போது அந்த மூன்று பேரைக் கைது செய்து, 10 மூட்டை ஜீன்ஸ் துணிகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கத்தை அவா்களிடம் இருந்து மீட்டனா். அவா்கள் மீது ஏற்கெனவே கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குள் உள்ளன. இதில் தொடா்புடைய பிற குற்றவாளிகளை கைது செய்வதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
