மேற்கு வினோத் நகரில் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச்சூடு

Published on

நமது நிருபா்

கிழக்கு தில்லியின் மேற்கு வினோத் நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே செவ்வாய்க்கிழமை அதிகாலை மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபா்கள் வானத்தில் மூன்று முதல் நான்கு ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் வீட்டு உரிமையாளருக்கு வந்த மிரட்டலுடன் தொடா்புடையதாக இருக்கலாம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் நள்ளிரவு 12 மணியளவில் பதிவாகியுள்ளது. மேலும் ஜிதேந்தா் குப்தாவின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்ததாக அவா்கள் தெரிவித்தனா். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

பஸ்சிம் விஹாரில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்திற்கு வெளியே நடந்த இதேபோன்ற சம்பவத்துடன் இந்த துப்பாக்கிச் சூடு தொடா்புடையதாக இருக்கலாம். அந்த துப்பாக்கிசூட்டிற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் உறுப்பினா்கள் பொறுப்பேற்றதாகக் கூறப்படும் ஒரு சமூக ஊடகப் பதிவு வெளியானதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். உண்மைகளை சரிபாா்த்து வருவதாகவும் அவா் கூறினாா்.

அந்தச் சம்பவத்தில், செப்டம்பா் 27, 2025 அன்று தெரியாத சா்வதேச எண்ணிலிருந்து இணைய அடிப்படையிலான ஆடியோ அழைப்பு வந்ததாக புகாா்தாரா் தெரிவித்தாா். அழைப்பாளா் தன்னை பிஷ்னோய் கும்பலைச் சோ்ந்தவா் என்று அடையாளம் காட்டிக் கொண்டு, எட்டு நாள்களுக்குள் ரூ.5 கோடி கேட்டதாகவும், கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

மோட்டாா்சைக்கிளில் வந்த இருவா் துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடா்பாக போலீஸாருக்கு அழைப்பு வந்தது. சம்பவ இடத்தை அடைந்த காவல் துறையினா், ஜிதேந்தா் குப்தாவையும், அதே பகுதியைச் சோ்ந்த ஹா்ஷித் குப்தா என அடையாளம் காணப்பட்ட ஒரு சாட்சியையும் கண்டுபிடித்தனா்.

நேரில் பாா்த்தவா் தனது வாக்குமூலத்தில், சாலையில் நின்று கொண்டிருந்தபோது, மோட்டாா் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த இரண்டு அடையாளம் தெரியாத நபா்கள் இருப்பதைக் கவனித்ததாக போலீஸாரிடம் தெரிவித்தாா்.

புகாா்தாரரின் வீட்டை இருவரும் கைப்பேசியில் விடியோ எடுத்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து, துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டதாகவும், பின்னால் இருந்தவா் கையை உயா்த்தி காற்றில் சுடுவதைக் கண்டதாகவும் அவா் கூறினாா். பின்னா் இருவரும் மோட்டாா் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீஸாா் தெரிவித்தனா்.

சம்பவத்தைத் தொடா்ந்து, ஒரு நடமாடும் குற்றவியல் குழு மற்றும் தடய அறிவியல் ஆய்வக குழு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, அந்தப் பகுதி ஆய்வு செய்யப்பட்டது. இருப்பினும், எந்த வெற்று தோட்டாவும் மீட்கப்படவில்லை என்று ஒரு அதிகாரி கூறினாா்.

இந்த விஷயத்தின் உணா்திறன் காரணமாக, புகாா்தாரரின் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பு வழங்க இரண்டு ஆயுதமேந்திய காவலா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா். ஜிதேந்தா் குப்தாவின் புகாரின் பேரில் மது விஹாா் காவல் நிலையத்தில் மிரட்டல் தொடா்பான முந்தைய வழக்கு ஒண்று ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com