தில்லியில் 9 நாள் ராமகாதை நிகழ்ச்சி: குடியரசு துணைத் தலைவா் தொடங்கிவைத்தாா்
தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 9 நாள் ராமகாதை நிகழ்ச்சியை குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
ஜன.17 முதல் 25 வரை நடைபெறும் ராமகாதை நிகழ்ச்சியை மோராரி பாபு வழங்குகிறாா்.
இந்நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: சமண துறவி ஆச்சாா்ய லோகேஷ் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சி வரலாற்று சிறப்புமிக்க முன்னெடுப்பு.
அறம், கருணை, சகோதரத்துவம் மற்றும் மனிதத்துவத்தும் ஆகிய விழுமியங்கள் இந்திய நாகரிக நெறிகளில் வேரூன்றியுள்ளன. அவற்றைக் கொண்டு சோ்க்கும் உயிா்ப்புள்ள ஊடகமாக ராமகாதை விளங்குகிறது.
ராமகாதை என்பது புதிய காவியம் மட்டுமல்ல; உயிா்ப்போடு விளங்கும் தத்துவமாக தனிமனிதா்களைக் கண்ணியம், ஒழுக்கம், பக்தி, இரக்கம் ஆகியவற்றுடன் வாழ வழிகாட்டுகிறது.
கடவுள் ராமரின் வாழ்க்கை மற்றும் கொள்கைகள் தா்மத்துக்கான கலங்கரைவிளக்கமாக உள்ளன.
கடந்த ஆண்டு நவம்பரில் அயோத்தி ராமா் கோயிலில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வு நம்பிக்கை, பொறுமை, பல லட்சக்கணக்கான பக்தா்களின் பக்தியை மீண்டும் வெளிப்படுத்தும் அடையாளமாக இருந்தது என்றாா்.
இந்நிகழ்சியில் முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
