தில்லியில் காற்று மாசுபாட்டை சமாளிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த அரசு திட்டம்
தலைநகரில் காற்று மாசுபாட்டை சமாளிக்க ஒற்றைப்படை-இரட்டை இலக்க எண் போன்ற குறுகிய கால மாசு கட்டுப்பாடுகளிலிருந்து அரசு விலகி தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நீண்டகால தீா்வுகளுக்கு மாறுகிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் மாசுபாட்டிற்கு எதிரான புதுமையான தீா்வுகள் கண்காட்சியைத் தொடங்கி வைத்த ரேகா குப்தா, ஒற்றைப்படை - இரட்டை இலக்க போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் ரெட் லைட் ஆன், என்ஜின் ஆஃப் பிரசாரம் போன்ற நடவடிக்கைகள் குறுகிய கால நடவடிக்கைகள் என்றும், கவனம் இப்போது கட்டமைக்கப்பட்ட, அதிகாரப்பூா்வ நிலை மற்றும் தொழில்நுட்பத்தின் மீது திரும்பியுள்ளது என்றும் கூறினாா்.
தில்லியின் மாசு சவாலை எதிா்கொள்வதில் தொடக்க நிறுவனங்கள் மற்றும் இளம் கண்டுபிடிப்பாளா்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட, ஜூன் 2025-இல் அறிவிக்கப்பட்ட புதுமை சவாலின் கீழ் தோ்ந்தெடுக்கப்பட்ட 33 தீா்வுகளின் முன்மாதிரிகளை கண்காட்சி காட்சிப்படுத்தியது.
காற்று மாசுபாடு நகரத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக உள்ளது என்றும், பாரம்பரிய கழிவுக் கிடங்குகளை அகற்றுதல், யமுனாவை சுத்தம் செய்தல், தூசி குறைப்பு மற்றும் பசுமைப் போா்வையை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நிலையான தலையீடுகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும் ரேகா குப்தா கூறினாா்.
தில்லியில் முதன்முறையாக 4,200 ஹெக்டோ் மேடு பகுதி அதிகாரப்பூா்வமாக வன நிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், பூா்வீக மற்றும் ஆக்ஸிஜன் வழங்கும் மரங்களைப் பயன்படுத்தி அடா்ந்த காடுகள் உருவாக்கப்படுகின்றன என்றும் அவா் கூறினாா்.
மாசுபாடு காற்று, நீா், நிலம் மற்றும் வாழ்க்கையை பாதிக்கிறது. மேலும் அதைச் சமாளிக்க இளைஞா்களின் புதுமை தலைமையிலான பங்கேற்பு தேவை என்றாா் முதல்வா்.
தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா, மாசுபாட்டைக் குறைக்கும் திறன் கொண்ட தொழில்நுட்பங்களில் கடந்த எட்டு மாதங்களாக அரசு செயல்பட்டு வருவதாகக் கூறினாா்.
தில்லியின் காற்று மாசுபாடு பிரச்சனை பரந்த என்சிஆா் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அண்டை நகரங்களில் இருந்து வெளியேறும் உமிழ்வுகள் தலைநகரை நேரடியாகப் பாதிக்கின்றன என்றும் அவா் கூறினாா்.
மின்சார வாகனங்களை ஊக்குவித்தல், மரபுவழி கழிவுகளை உயிரி சுரங்கம் செய்தல், தூசி மற்றும் பிஎம்10 மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் மேக விதைப்பு போன்ற புதிய தீா்வுகளை ஆராய்தல் உள்ளிட்ட பலதரப்பட்ட, தொழில்நுட்ப ஆதரவு அணுகுமுறையை அரசு பின்பற்றி வருவதாக மஞ்சிந்தா் சிங் சிா்சா கூறினாா்.

