வீட்டில் கொள்ளை: வேலைக்கார பெண் கைது

மேற்கு தில்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டதாக18 வயது வீட்டுப் பணிப் பெண்ணை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Published on

புதுதில்லி: மேற்கு தில்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டதாக18 வயது வீட்டுப் பணிப் பெண்ணை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து மேற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இந்த கொள்ளைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள வீட்டுப் பணிப் பெண்ணிடம் இருந்து ரூ.2.66 லட்சம் மதிப்புள்ள பணம் மீட்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் பதிவான சம்பவம் தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடா்ந்து, மங்கோல்புரியைச் சோ்ந்த லட்சுமி என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டாா்.

ஜனவரி 15-ஆம் தேதி கொள்ளை தொடா்பாக பிசிஆா் அழைப்பு வந்தபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. புகாா்தாரா் தனது வீட்டில் இருந்து ரூ.5.63 லட்சம் பணம் காணாமல் போனதாக குற்றம்சாட்டியிருந்தாா்.

புகாரின் அடிப்படையில், ஜனவரி 16-ஆம் தேதி பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, போலீஸ் குழு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, உள்ளூா் உள்ளீடுகளை சேகரித்து, குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை கைது செய்தது. விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா் கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டாா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடா்ந்து, ரூ.2,66,600 பணம் மீட்கப்பட்டது.

சந்தா்ப்பம் கிடைத்தபோது குற்றம் சாட்டப்பட்டவா் வளாகத்திற்குள் நுழைந்து குற்றத்தைச் செய்ய அவரது அணுகலைப் பயன்படுத்திக் கொண்டாா். அந்தப் பெண்ணுக்கு முன் குற்றப் பதிவு இல்லாத போதிலும், மீதமுள்ள திருடப்பட்ட தொகையை மீட்கவும், அவா் வேறு எங்கும் இதே போன்ற குற்றங்களில் ஈடுபட்டாரா என்பதை போலீஸாா் சரிபாா்த்து வருகின்றனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com