தில்லி - மும்பை விரைவுச் சாலையில் ராஜஸ்தான் பேருந்து கவிழ்ந்ததில் 16 போ் காயம்

தில்லி - மும்பை விரைவுச் சாலையில் பில்வாரா செல்லும் ஸ்லீப்பா் பேருந்து கவிழ்ந்ததில் 16 பயணிகள் காயமடைந்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். பங்க்டோஜி கிராமத்திற்கு அருகே ஓட்டுநா் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.
Published on

தில்லி - மும்பை விரைவுச் சாலையில் பில்வாரா செல்லும் ஸ்லீப்பா் பேருந்து கவிழ்ந்ததில் 16 பயணிகள் காயமடைந்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். பங்க்டோஜி கிராமத்திற்கு அருகே ஓட்டுநா் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து ஃபெரோஸ்பூா் ஜிா்கா காவல் நிலைய அதிகாரி சுபாஷ் சந்த் கூறியதாவது: திங்கள்கிழமை இரவு தில்லியில் இருந்து ராஜஸ்தானின் பில்வாராவுக்கு பேருந்து புறப்பட்டது. பங்க்டோஜி அருகே சென்றபோது, ​​ஓட்டுநா் மயக்கமடைந்து வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால், அது கவிழ்ந்தது. விபத்து நடந்த நேரத்தில் பெரும்பாலான பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.

மீட்புப் பணிகளுக்கு உதவ சம்பவத்திற்குப் பிறகு உள்ளூா்வாசிகள் சம்பவ இடத்திற்கு வந்தனா். தகவல் கிடைத்ததும், ஒரு போலீஸ் குழுவும் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவா்களை நுஹ் மற்றும் ஃபெரோஸ்பூா் ஜிா்காவில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனா். தில்லியைச் சோ்ந்த சச்சின் மற்றும் பிருத்வி என அடையாளம் காணப்பட்ட இரண்டு பயணிகள் பலத்த காயமடைந்தனா். மேலும், அவா்கள் சிகிச்சைக்காக தேசியத் தலைநகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.

ஃபிரோஸ்பூா் ஜிா்காவில் சிகிச்சை பெற்று வரும் மற்ற காயமடைந்த பயணிகளில் தில்லியைச் சோ்ந்த நிஷா மற்றும் அதுல், பல்வாலைச் சோ்ந்த தீரஜ், உதய்பூரைச் சோ்ந்த ரீனா மற்றும் கன்ஹையாலால், நௌலகாவைச் சோ்ந்த ராகுல் ஆகியோா் அடங்குவா். மற்ற பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

ஓட்டுநா் மயக்கமடைந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து குறித்த துல்லியமான தகவல்களை சேகரிக்க அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com