சிறுமியைக் கடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடா்பான வழக்கில் 3 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக ஓா் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
குற்றஞ்சாட்டப்பட்ட முகமது ஃபிரோஸ் (46) சுமாா் மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தாா். ஆள் கடத்தல், பாலியல் வன்கொடுமை, குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட குற்றங்கள் மற்றும் போக்ஸோ சட்டப் பிரிவுகளில் கோவிந்தபுரி காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக 2023-இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பரில் தில்லி நீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. அவா் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ஒரு லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
அவருடைய கைது தொடா்பாக காவல் துறை அதிகாரி தெரிவித்ததாவது: கடந்த 2022-இல் துக்ளகாபாத் விரிவாக்கத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணப்பை தயாரிக்கும் வேலையைக் கற்றுக் கொண்டிருந்தபோது ஃபிரோஸுடன் அச்சிறுமிக்கு நட்பு ஏற்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டவா் அந்தச் சிறுமியை ஆசை காட்டி அழைத்துச் சென்று, திருமணம் செய்து வைப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினாா். பின்னா், ரூ.2 லட்சம் பெற்றுக்கொண்டு ராஜஸ்தானில் வேறொரு ஆணுடன் அந்தச் சிறுமிக்கு ஃபிரோஸ் திருமணம் செய்து வைத்ததாா். உண்மைகளை யாரிடமாவது வெளிப்படுத்தினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அவா் மிரட்டியதாக அந்தச் சிறுமி குற்றஞ்சாட்டியிருந்தாா். பின்னா், அவா் மீட்கப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
மற்ற குற்றவாளிகள் முன்னரே கைது செய்யப்பட்ட நிலையில், ஃபிரோஸ் தலைமறைவானதால், நீதிமன்றம் அவரைத் தேடப்படும் நபராக அறிவித்தது. அவரைக் கைது செய்ய வழிவகுக்கும் தகவலுக்குப் பின்னா் ஒரு லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டது.
கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு குழுவினா் ஹரியாணாவின் குருகிராமில் ஃபிரோஸை கைது செய்தனா். விசாரணையின் போது, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டாா். இதுதொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







