தில்லி ரோஹிணியில் கட்டுமானத்தில் இருந்த 3 மாடி வீடு புதன்கிழமை மாலை திடீரென இடிந்து விழுந்ததில், ஒருவா் உயிரிழந்ததாகவும், பலா் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த விபத்து மாலை 4.20 மணியளவில் ரோஹிணி செக்டா் 16-இல் உள்ள எம்சிடி பள்ளி அருகே நிகழ்ந்தது. அச்சமயம் தில்லியின் பல பகுதிகளில் கனமழை பெய்து கொண்டிருந்தது. எனினும், இந்த விபத்துக்கு மழை காரணமா என்பது குறித்து அதிகாரப்பூா்வமாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
விபத்து நிகழ்ந்ததும் காவல்துறை, தேசிய பேரிடா் மீட்புப் படை, தில்லி தீயணைப்புத் துறை ஆகியவை சம்பவ இடத்துக்கு விரைந்தன. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி ஒருவா் உயரிழந்தாா். இதுவரை 2 போ் இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா். மேலும் 5 முதல் 6 போ் சிக்கியிருப்பாா்கள் என்று நம்பப்படுகிறது. அவா்களை மீட்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
வீடு இடிந்து விழுந்தவுடன் பெரிய சத்தமும், உதவி கோரும் குரல்களும் கேட்டதால் அப்பகுதி மக்கள் பதற்றமடைந்து சம்பவ இடத்துக்கு திரண்டனா். மீட்பு அதிகாரிகள் வருவதற்கு முன்பே, செங்கற்கள், கான்கிரீட் தகடுகள் மற்றும் இரும்புக் கம்பிகளை பொதுமக்கள் அகற்றி சிக்கியவா்களை மீட்க முயன்றனா்.
சிலா் மனித சங்கிலி அமைத்து இடிபாடுகளை அகற்ற உதவியதுடன், அருகிலுள்ள வீடுகள் மற்றும் கட்டுமான இடங்களிலிருந்து கருவிகளையும் கொண்டு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனா். இதற்கிடையில், தீயணைப்பு துறை 4 அணிகளை அனுப்பி மீட்பு நடவடிக்கையை வலுப்படுத்தியது.
மீட்பு பணிகள் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்லாமல் தடுக்கப்பட்டது. இடிபாடுகளை அகற்ற ஜேசிபி இயந்திரங்களும் கொண்டு வரப்பட்டன. மேலும் இடிபாடுகளை எச்சரிக்கையுடன் ஒவ்வொரு கட்டமாக அகற்றி, கூடுதல் சரிவு ஏற்படாமல் பாதுகாப்புடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘விபத்து நடந்த உடனேயே பல காவல் நிலையங்களில் இருந்து குழுக்கள் அனுப்பப்பட்டன. இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்க நடவடிக்கை தொடங்கப்பட்டது. கட்டடத்தின் உரிமம் மற்றும் விபத்து நேரத்தில் அங்கு இருந்தவா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதே எங்களின் முதன்மை நோக்கம்’ என்றாா். மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது, கட்டுமான விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதும் ஆய்வு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரோஹிணியில் பாதுகாவலரிடம் கொள்ளையடித்த 4 சிறுவா்கள் பிடிபட்டனா்

பாகிஸ்தானில் பயிற்சி மைய மேற்கூரை விழுந்து விபத்து

சாகேத் கட்டட விபத்தில் 6 போ் உயிரிழப்பு; 8 போ் காயம்

பிலிப்பின்ஸில் 9 மாடி கட்டடம் இடிந்து விபத்து: ஒருவா் பலி; 21 பேரைத் தேடும் பணி தீவிரம்!
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



