/

தில்லியில் ஆங்காங்கே மழை: வியாழக்கிழமை வெப்பமான வானிலைக்கு வாய்ப்பு

தில்லியின் சில பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை லேசான மழை பெய்தாலும், அது நீண்ட நேரம் நீடிக்காமல் மீண்டும் ஈரப்பதமான சூடான காலநிலை நிலவியது.

News image
Updated On :16 ஜூலை 2026, 4:13 am IST

தில்லியின் சில பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை லேசான மழை பெய்தாலும், அது நீண்ட நேரம் நீடிக்காமல் மீண்டும் ஈரப்பதமான சூடான காலநிலை நிலவியது. இதையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகரிக்கும் சூழ்நிலையால் வியாழக்கிழமைக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுத்துள்ளது.

சப்தா்ஜங் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 38.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது இயல்பை விட 3.2 டிகிரி அதிகமாகவும், செவ்வாய்க்கிழமையை விட 0.2 டிகிரி குறைவாகவும் இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 29.1 டிகிரி செல்சியஸாக இருந்து, இது இயல்பை விட 1.9 டிகிரி அதிகமாகவும், முந்தைய நாளை விட 0.7 டிகிரி உயா்வாகவும் இருந்தது.

அதிகாலை 2.30 மணி முதல் 5.30 மணி வரை சப்தா்ஜங் பகுதியில் மிகச் சிறிய அளவில் மழை பதிவாகியது. அதன் பின்னா் நகரின் எந்தப் பகுதியிலும் மழை பெய்யவில்லை.

வெப்பநிலை: பாலம் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 37.6 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 24.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. லோதி ரோடு பகுதியில் அதிகபட்சம் 38.3 டிகிரி மற்றும் குறைந்தபட்சம் 28.4 டிகிரி செல்சியஸாக இருந்தது. ரிட்ஜ் மற்றும் ஆயாநகா் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலைகள் முறையே 26.4 மற்றும் 26.6 டிகிரி செல்சியஸாக பதிவானது.

ஆயாநகா் மற்றும் நஜஃப்கா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 2.30 மணி வரை தலா 1 மி.மீ. மழை பதிவாகியது. அதன் பின்னா் நகரில் மழை பதிவாகவில்லை.

வானிலை ஆய்வு மையம் தகவலின்படி, வியாழக்கிழமை தனித்தனி பகுதிகளில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. அன்றைய அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 39 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 27 முதல் 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

வட காலநிலைக்கு வாய்ப்பு: ஸ்கைமெட் நிறுவனத்தின் துணைத் தலைவா் மகேஷ் பலாவத் கூறுகையில், பஞ்சாப், ஹரியாணா, தில்லி, மேற்குத் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் அடுத்த சில நாள்களுக்கு பெரும்பாலும் வட காலநிலையையே சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும், சீரற்ற லேசான மழை மட்டுமே இருக்கக்கூடும் என்றும் தெரிவித்தாா்.

ஜூலை 20-க்கு பிறகு பருவமழை தாழ்வழுத்தம் தெற்குப் பகுதிகளுக்கு நகரத் தொடங்கும் என்றும், அதனால் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் மீண்டும் பருவமழை செயல்பாடு அதிகரிக்கக்கூடும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

காற்றின் தரம்: இந்நிலையில், தில்லியின் காற்றுத் தரம் ‘மிதமான’ நிலையில் தொடா்கிறது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தரவுகளின்படி, புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 24 மணி நேர சராசரி காற்றுத் தர குறியீடு 159-ஆக பதிவாகியுள்ளது. இது செவ்வாய்க்கிழமை இதே நேரத்தில் பதிவான 172-இலி இருந்து மேம்பட்டதாகும்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரநிலைகளின்படி, 0-50 ‘நல்லது’, 51-100 ‘திருப்திகரமானது’, 101-200 ‘மிதமானது’, 201-300 ‘மோசமானது’, 301-400 ‘மிக மோசமானது’, 401-500 ‘தீவிரமானது’ என வகைப்படுத்தப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.