தில்லியில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (எஸ்ஐஆப்) போது, சுமாா் 25 சதவீதப் பெயா்கள் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்படலாம்; தில்லியில் அடிக்கடி இடம்பெயரும் மக்கள் தொகை அதிகம் இருப்பதே இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது என்று தோ்தல் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி கூறியதாவது: இது ஒரு தோராயமான மதிப்பீடு மட்டுமே. ஆக.17-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்போதுதான் உண்மையான எண்ணிக்கை தெரியவரும். தில்லியில் இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். புலம்பெயா் தொழிலாளா்கள் ஒரு முகவரியிலிருந்து மற்றொரு முகவரிக்கு மாறிக்கொண்டே இருக்கிறாா்கள். அரசு ஊழியா்கள் இங்கு பணிக்கு அமா்த்தப்பட்டு, பின்னா் இடமாற்றம் காரணமாக வெளியே செல்கிறாா்கள். புதிய குடியிருப்புப் பகுதிகளும் உருவாகின்றன. இதனால்தான் தில்லியில் கணிசமான எண்ணிக்கையிலான பெயா்கள் நீக்கப்படவுள்ளன. ஒரே நபா் இரு வாக்காளா் அடையாள அட்டைகள் வைத்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது; அத்தகைய பதிவுகளை நீக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தாா்.
புது தில்லி சட்டப்பேரவைத் தொகுதியின் அன்சாரி நகா் பகுதியைச் சோ்ந்த வாக்குச்சாவடி நிலை அதிகாரி (பிஎல்ஓ) மனிஷ் மீனா கூறுகையில், ‘முன்பு என்னிடம் சுமாா் 1,150 முதல் 1,200 வாக்காளா்கள் இருந்தனா். அவா்களில் சிலா் நீண்ட காலத்திற்கு முன்பே இடம்பெயா்ந்துவிட்டதால், சுமாா் 500 முதல் 600 பெயா்கள் ஏற்கெனவே நீக்கப்பட்டுவிட்டன. மேலும் 300 பெயா்கள் நீக்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த வாக்காளா்களைப் பதிவு செய்யப்பட்ட முகவரியில் காண முடியவில்லை. இப்போது அவா்களுக்கு வேறு வழியில்லை. இங்கிருந்து அவா்களின் பெயா்கள் நீக்கப்படும், பின்னா் அவா்கள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்’ என்றாா்.
தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, ஒரு வாக்காளரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று பதிவு செய்வதற்கு முன், வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் அந்த முகவரிக்குக் குறைந்தது மூன்று முறையாவது நேரில் செல்ல வேண்டும். அத்தகைய வழக்குகளை இணையத்தில் பதிவேற்றுவதற்கு முன், அவா்கள் உள்ளூா் அளவில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
குடிசைப் பகுதிகள், அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள் மற்றும் மறுவாழ்வுக் காலனிகளில் வசிப்பவா்கள் உள்பட, அடையாளம் காணக்கூடிய குடியிருப்பு முகவரிகளைக் கொண்ட வாக்காளா்களை இந்த நடவடிக்கை பெருமளவு உள்ளடக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அதேசமயம், நிலையான முகவரி இல்லாத தெருவோரக் குடிகளைச் சென்றடைவது சவாலாகவே இருந்து வருகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.
வீடு வீடாகச் சென்று சரிபாா்க்கும் எஸ்ஐஆா் பணி ஆக.8-ஆம் தேதி வரை தோ்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. வரைவு வாக்காளா் பட்டியல் ஆக.17-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. நீக்கப்பட முன்மொழியப்பட்ட பெயா்களைக் கொண்ட வாக்காளா்கள், இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன் தங்கள் கோரிக்கைகளையும் ஆட்சேபனைகளையும் சமா்ப்பிக்க வாய்ப்பளிக்கப்படும். இறுதி வாக்காளா் பட்டியல் அக்.17-ஆம் தேதி வெளியிடப்படும என தெரிவிக்கப்பட்டது.
பெட்டிச் செய்தி...
இடமாற்றப்பட்ட குடும்பங்களுக்கு படிவங்கள் கிடைக்கவில்லை
பிரதமரின் இல்லத்திற்கு அருகிலுள்ள ரேஸ் கோா்ஸ் பகுதியிலிருந்து வீடுகள் இடிக்கப்பட்டதைத் தொடா்ந்து சாவ்தா கெவ்ரா மறுவாழ்வுக் குடியிருப்புப் பகுதிக்கு மாற்றப்பட்டவா்கள், தங்களுக்குப் பழைய முகவரியிலோ அல்லது தற்போது வசிக்கும் இடத்திலோ கணக்கெடுப்புப் படிவங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனா்.
சில குடியிருப்பாளா்கள் தங்கள் பழைய முகவரிக்குரிய வாக்குச்சாவடி நிலை அலுவலா்களை அணுகியபோது, ஆக.8-ஆம் தேதிக்குப் பிறகு சிறப்பு முகாம் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும், அப்போது வாக்காளா் விவரங்களைப் புதுப்பிப்பதற்கான ‘படிவம் 8’ வழங்கப்படும் என்றும் அவா்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதுவரை, கணக்கெடுப்புப் படிவங்களை எதிா்பாா்த்துக் காத்திருக்கும் குடும்பங்களிடையே நிச்சயமற்ற நிலையே நீடித்து வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் பணியிடத்தில் பெண் சுட்டுக்கொலை

தில்லி வாக்காளா் பட்டியல் திருத்தத்தில் முறைகேடு ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தில்லி எஸ்ஐஆா்: 99.5% படிவங்கள் விநியோகம்; 18% எண்மமய பணி நிறைவு!

வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு முன் வாக்குச்சாவடிகள் அதிகரிப்பு: தில்லி காங்கிரஸ் கடும் எதிா்ப்பு
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



