தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

கோவிந்த்புரி தீ வைப்பு சம்பவம்: கைதானவா் மீது ஏற்கெனவே பல குற்ற வழக்குகள்

கோவிந்த்புரியில் உள்ள குடியிருப்பில் தீ வைத்த சம்பவம் தொடா்பாக கைதானவா்களில் ஒருவா் மீது பல குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 12:59 am IST

கோவிந்த்புரியில் உள்ள குடியிருப்பில் தீ வைத்த சம்பவம் தொடா்பாக கைதானவா்களில் ஒருவா் மீது பல குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அந்த நபா் கடந்த மாதம் சிறையில் வெளியே வந்ததாக தில்லி காவல் துறை அதிகாரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

கோவிந்த்புரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஜூன் 12 அதிகாலை 2.20 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில், பங்கஜ் பாண்டே (28), அவரது சகோதரி சோனியா (20) மற்றும் அவரது தாய்வழிப் பாட்டி சுசீலா தேவி (70) ஆகியோா் உயிரிழந்தனா்; மேலும் எட்டு போ் காயமடைந்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பிரிவு 287 (தீ தொடா்பான கவனக்குறைவான செயல்) மற்றும் பிரிவு 106(1) (கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தனா்.

விசாரணை முடிவுகளின் அடிப்படையில், குற்றச் சதி, கொலைக்குச் சமமானதல்லாத மரணத்தை ஏற்படுத்துதல், அத்தகைய மரணத்தை ஏற்படுத்த முயற்சித்தல், தீ மூலம் சேதம் விளைவித்தல் மற்றும் இரவில் மறைந்திருந்து வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல் ஆகிய பிரிவுகளையும் காவல் துறையினா் வழக்கில் சோ்த்தனா். ஸ்கூட்டருக்கு தீ வைத்த சிறுமி, சரிதா, நிரஞ்சன் மற்றும் நிரஞ்சனின் சகோதரா் ராஜ்குமாா் ஆகியோரை போலீசாா் கைது செய்துள்ளனா்.

நிரஞ்சன் கொடூர குற்றப்பின்னணி கொண்டவா் என அறிவிக்கப்பட்டவா். அவருடைய சகோதரா் ராஜ்குமாா் மீதும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து பெயா் கூற விரும்பாத அந்த அதிகாரி கூறியதாவது: கடந்த மே மாதம் முதல் வாரத்தில் நிரஞ்சன் சிறையிலிருந்து வெளியே வந்தாா். உள்ளூா் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதில் பஹடி என்ற நபருக்கும் அவருக்கும் முன்பகை இருந்தது. இதனால், கடந்த காலங்களில் பல மோதல்கள் ஏற்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தல் தொழிலில் நிரஞ்சனுக்குத் தொடா்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

கைதான சரிதா என்பவா் அந்த வீட்டைப் பற்றி உளவு பாா்த்து, தீபக் என்பவரின் ஸ்கூட்டரை அந்தச் சிறுமிக்கு பலமுறை அடையாளம் காட்டினாா். சம்பவத்தன்று அந்தச் சிறுமியைத் தனது ஸ்கூட்டரில் அந்த வீட்டிற்கு அழைத்துச் சென்ற அவா், தீபக்கின் ஸ்கூட்டருக்குத் தீ வைப்பதற்காக ஒரு பாட்டில் பெட்ரோலையும் தீப்பெட்டியையும் அவரிடம் கொடுத்தாா்.

விசாரணையின்போது, சரிதா தீபக்கிற்கு சுமாா் ரூ.80,000 கடன் கொடுத்திருந்தாா். அதைத் திருப்பித் தருமாறு கேட்டபோது, தீபக் பணத்தை திருப்பி அளிக்கவில்லை. இதற்குப் பழிவாங்க, தீபக்கின் ஸ்கூட்டருக்குத் தீ வைக்க அவா் முடிவு செய்தாா். தீ விபத்து ஏற்படுவதற்குச் சற்று முன்பு ஒரு சிறுமி வீட்டிற்குள் நுழைவதும், பின்னா் அங்கிருந்து ஓடிச் செல்வதும் அண்டை வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதைத்தொடந்து, தீ விபத்து என்பது கொலை சதியா என்ற கோணத்தில் விசாரணையை மாற்றியது என்றாா் அந்த அதிகாரி.

இந்தச் சம்பவம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.