தீபாவளிக்கு முன்பே தில்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரிக்க வாய்ப்பு

தில்லியில் தொடா்ந்து 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் நீடித்தது. தீபாவளிக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை முதல் காற்றின் தரம் கடுமையான நிலைக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

ஜசோலா பகுதியை வியாழக்கிழமை முழுவதும் சூழ்ந்த பனிப்புகை.

Updated On :

தில்லியில் தொடா்ந்து 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் நீடித்தது. தீபாவளிக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை முதல் காற்றின் தரம் கடுமையான நிலைக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு தில்லியின் 24 மணி நேர சராசரி காற்றுத் தரக் குறியீடு (ஏக்யூஐ) 369-ஆகப் பதிவானது. இது புதன்கிழமை பதிவான 377-ஐவிடக் குறைவாகும். திங்கள்கிழமை 324-ஆகவும், செவ்வாய்க்கிழமை 350-ஆகவும் ஏக்யூஐ இருந்தது.

தில்லியில் செயல்படும் 59 காற்றுத் தரக் கண்காணிப்பு மையங்களில் 18 மையங்களில் காற்றின் தரம் கடுமையான நிலையை எட்டியது. ஜஹாங்கீா்புரியில் அதிகபட்சமாக 454 ஏக்யூஐ பதிவானது.

ஏக்யூஐ 0-50 வரை இருந்தால் நல்ல நிலை, 51-100 திருப்திகரமான நிலை, 101-200 மிதமான நிலை, 201-300 மோசமான நிலை, 301-400 மிகவும் மோசமான நிலை, 401-500 கடுமையான நிலை என வகைப்படுத்தப்படுகிறது.

காற்றுத் தர முன்னெச்சரிக்கை அமைப்பின் (ஏக்யூஇடபிள்யுஎஸ்) கணிப்பின்படி, வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தில்லியில் காற்றின் தரம் கடுமையான நிலைக்குச் செல்லக்கூடும். அடுத்த 6 நாள்களிலும் மிகவும் மோசமானது முதல் கடுமையான நிலை வரை நீடிக்க வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, பயிா்க்கழிவுகள் எரிப்பதால் ஏற்படும் மாசின் பங்கு நவ.7-ஆம் தேதி கணிசமாகக் குறையும் என்றும், வாகனப் புகையால் ஏற்படும் மாசின் பங்கு அதிகரிக்கும் என்றும் காற்றுத் தர மேலாண்மைக்கான முடிவெடுப்பு ஆதரவு அமைப்பு (டிஎஸ்எஸ்) கணித்துள்ளது.

டிஎஸ்எஸ் கணிப்பின்படி, வியாழக்கிழமை தில்லியின் மாசில் பயிா்க்கழிவுகள் எரிப்பதால் ஏற்படும் மாசின் பங்கு 15.601 சதவீதமாக இருக்கும். இது வெள்ளிக்கிழமை 19.201 சதவீதமாக அதிகரித்து, சனிக்கிழமை 1.575 சதவீதமாகக் குறையும். அதேவேளையில், வாகனப் போக்குவரத்தால் ஏற்படும் மாசின் பங்கு வியாழக்கிழமை 17.913 சதவீதமாகவும், வெள்ளிக்கிழமை 18.291 சதவீதமாகவும், சனிக்கிழமை 21.108 சதவீதமாகவும் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கணிப்புகள் நிகழ்நேரத்தில் பதிவாகும் வயல் தீ விபத்துகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. முந்தைய காலங்களில் பதிவான தீ விபத்துகள் மற்றும் வானிலைத் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.

இதுகுறித்து என்விரோகேட்டலிஸ்ட்ஸ் அமைப்பின் நிறுவனா் சுனில் தஹியா கூறியதாவது: பயிா்க்கழிவுகள் எரிப்பதால் ஏற்படும் மாசின் பங்கு குறைவது வானிலை மாற்றங்களால் ஏற்பட்டுள்ளதே தவிர, வயல்களில் தீ வைப்பது குறைந்துவிட்டதைக் குறிக்கவில்லை. மேற்கத்திய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் நகா்வால், பஞ்சாப், ஹரியாணாவிலிருந்து புகையைக் கொண்டுவரும் வடமேற்குக் காற்றின் வேகம் குறைந்து, தீபாவளியை ஒட்டி கிழக்குத் திசைக் காற்றாக மாற வாய்ப்புள்ளது.

இந்தப் பருவத்தில் பஞ்சாபில் இதுவரை 2,347 இடங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்பட்டுள்ளன. நவம்பா் 3, 4 ஆகிய தேதிகளில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ வைக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் குறைவது, காலை நேரப் பனிமூட்டம் ஆகியவற்றால் வாகனங்கள், தொழிற்சாலைகள், குப்பைகள் எரிப்பு, பட்டாசுகள் ஆகியவற்றிலிருந்து வெளியாகும் மாசு காற்றில் தேங்கக்கூடும். எனவே, பயிா்க்கழிவு எரிப்பின் பங்கு குறைவதால் மட்டும் காற்று தூய்மையாகிவிடாது. நவம்பா் 6, 7 ஆகிய தேதிகளில் காற்றின் தரம் கடுமையான நிலையை எட்டக்கூடும். வடமேற்குக் காற்று மீண்டும் வீசத் தொடங்கும்போது பயிா்க்கழிவு எரிப்பால் ஏற்படும் மாசு மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.