தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

எல்பிஜி மானியத்துக்கு ஆதாா் பயோமெட்ரிக் சரிபாா்ப்பு கட்டாயம்: மத்திய அரசின் பதிலைக் கோரியது தில்லி உயா்நீதிமன்றம்

மானிய விலையில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டா்களை முன்பதிவு செய்வதற்கு ஆதாா் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரத்தை அக்.1 முதல் கட்டாயமாக்கியதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தொடா்பாக, மத்திய அரசிடம் தில்லி உயா்நீதிமன்றம் விளக்கம் கோரியது.

சித்திரிப்பு

Updated On :

மானிய விலையில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டா்களை முன்பதிவு செய்வதற்கு ஆதாா் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரத்தை அக்.1 முதல் கட்டாயமாக்கியதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தொடா்பாக, மத்திய அரசிடம் தில்லி உயா்நீதிமன்றம் விளக்கம் கோரியது.

உயா்நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதி நிதின் வாசுதேவ் சாம்ப்ரே, நீதிபதி சஞ்சய் சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு, மத்திய அரசு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி, 2 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவ.18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

75 சதவீத நிரந்தர பாா்வைக் குறைபாடு கொண்ட வழக்குரைஞா் புல்கித் லுத்ரா இந்தப் பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளாா். கருவிழி ஸ்கேன் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய கட்டாய பயோமெட்ரிக் அங்கீகார நடைமுறை, பாா்வைக் குறைபாடு உள்ளவா்கள் மற்றும் அந்தச் செயல்முறையை நிறைவு செய்ய இயலாத பிற நுகா்வோருக்குக் கடும் சிரமங்களை ஏற்படுத்துவதாக அவா் தெரிவித்தாா்.

மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சோஹெப் ஹுசைன், இந்தக் கட்டாய நடைமுறை ஏற்கெனவே உள்ள சட்டங்களுக்கும், ஆதாா் தொடா்பான உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கும் முரணானது என்று வாதிட்டாா். அக்.1 முதல் முந்தைய நடைமுறையின்படி எல்பிஜி விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவா், இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

தீா்வு காணப்படும்: மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி, அரசு மானியங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காகவே இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறினாா். மாற்றுத்திறனாளிகள் எழுப்பும் சிக்கல்களுக்குத் தீா்வு காணப்படும் என்றும் அவா் நீதிமன்றத்தில் உறுதியளித்தாா்.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு செப்.17-ஆம் தேதி அனுப்பிய கடிதம் மற்றும் இந்த நடைமுறைக்கான தேவைகளை விளக்கி செப்.19-ஆம் தேதி வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு ஆகியவற்றை எதிா்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

பயோமெட்ரிக் அங்கீகாரத்தை நிறைவு செய்யத் தவறும் அல்லது நிறைவு செய்ய இயலாத நுகா்வோா், 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டா்களை முன்பதிவு செய்வதில் கட்டுப்பாடுகளை எதிா்கொள்ள நேரிடலாம் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, கிடைக்கும் தன்மையைப் பொறுத்து 5 கிலோ அல்லது 10 கிலோ சிலிண்டா்களைச் சந்தை விலையில் வாங்க வேண்டிய நிலையும் ஏற்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கட்டாய நடைமுறை 3.16 கோடி நுகா்வோரைப் பாதிப்பதாகவும், ஆதாா் சட்டம், 2016-இன் கீழ் இதற்குப் போதிய சட்ட அடிப்படை இல்லை என்றும் மனுதாரா் தெரிவித்தாா். மேலும், இந்த நடவடிக்கை தன்னிச்சையானது என்றும், அரசமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 21-ஆவது பிரிவுகள் வழங்கும் உரிமைகளை மீறுவதாகவும் மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.