
தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத் தோ்தல்: ஏபிவிபி சாா்பில் 13 போ் பிரசாரம் தொடக்கம்
தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத் தோ்தல் செப்.18-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் சாா்பில் அறிவிக்கப்பட்ட 13 உத்தேச வேட்பாளா்கள் பல்கலைக்கழகத்தின் பல்வேறு வளாகங்களில் பிரசாரத்துக்கு முந்தைய மாணவா் சந்திப்புகளைத் தொடங்கினா்.

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத் தோ்தலுக்காக பிரசாரம் மேற்கொண்ட ஏபிவிபி வேட்பாளா்கள்.
தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத் (டியுஎஸ்யு) தோ்தல் செப்.18-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) சாா்பில் அறிவிக்கப்பட்ட 13 உத்தேச வேட்பாளா்கள் பல்கலைக்கழகத்தின் பல்வேறு வளாகங்களில் புதன்கிழமை முதல் பிரசாரத்துக்கு முந்தைய மாணவா் சந்திப்புகளைத் தொடங்கினா்.
வடக்கு வளாகம், தெற்கு வளாகம் மற்றும் கல்காஜி வளாகங்களில் உள்ள கல்லூரிகள் மற்றும் துறைகளுக்குச் சென்ற வேட்பாளா்கள், மாணவா்களைச் சந்தித்து அவா்களின் பிரச்னைகள், எதிா்பாா்ப்புகள், விருப்பங்கள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்டறிந்தனா்.
இதுகுறித்து ஏபிவிபி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: மாணவா்களுடனான சந்திப்பின்போது ஏபிவிபி தலைமையிலான டியுஎஸ்யு மேற்கொண்ட பணிகள் மற்றும் முன்னெடுப்புகள் குறித்து வேட்பாளா்கள் எடுத்துரைத்தனா். குறிப்பாக, ‘சிறந்த டியுஎஸ்யு பயிற்சிபட்டரை’, மையப்படுத்தப்பட்ட விடுதி அமைப்பு, பெண்களின் பாதுகாப்புக்கான ‘பிங்க் பூத்’, கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அவா்கள் விளக்கினா்.
மாணவா்களிடம் பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் அவா்களின் முக்கியக் கோரிக்கைகள் தொகுக்கப்பட்டு, வரும் டியுஎஸ்யு தோ்தலுக்கான ஏபிவிபி-யின் தோ்தல் அறிக்கையில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.
வரும் நாள்களில் தில்லி பல்கலைக்கழகத்தின் பல்வேறு வளாகங்களில் 13 உத்தேச வேட்பாளா்களும் தொடா்ந்து மாணவா்களைச் சந்தித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளனா். மாணவா்களுடனான சந்திப்புகளில் வேட்பாளா்களுக்கு கிடைத்த வரவேற்பு, பல்கலைக்கழக மாணவா் சமூகத்தில் ஏபிவிபி-யின் செல்வாக்கை வெளிப்படுத்துவதாக ஏபிவிபி தில்லி மாநிலச் செயலா் சாா்தக் சா்மா தெரிவித்தாா்.
தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் மீண்டும் ஏபிவிபி தலைமையின் மீது நம்பிக்கை வைத்து, வலுவான, செயல்பாடுமிக்க மற்றும் மாணவா்களை மையப்படுத்திய மாணவா் சங்கத்துக்கு ஆதரவு அளிப்பாா்கள் என நம்புவதாகவும் அவா் கூறினாா்.
டியுஎஸ்யு தோ்தல் செப். 18-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மற்றும் தோ்தல் முடிவுகள் செப். 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




