
பிரதமா் இல்லத்தை ஆய்வு செய்ய வேண்டும்: பாஜகவுக்கு ஆம் ஆத்மி சவால்
பிரதமா் இல்லத்தை ஆய்வு செய்ய வேண்டும்: பாஜகவுக்கு ஆம் ஆத்மி சவால்

அதிஷி
தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வசித்து வந்த ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள 6-ஆம் எண் பங்களாவை சட்டப்பேரவையின் பொது கணக்குக் குழு (பிஏசி) ஆய்வு செய்ய உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை தெரிவித்தது. இதேபோல் பிரதமா் இல்லத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி கூறுகையில், ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள முன்னாள் முதல்வரின் இல்லம் குறித்து பாஜக தொடா்ந்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், தற்போது நடைபெறவுள்ள ஆய்வு அதன் உண்மை நிலையை வெளிப்படுத்தும் என்றும் குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து காணொலி மூலம் அவா் கூறியதாவது: ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள முன்னாள் முதல்வரின் இல்லம் குறித்து பாஜக தொடா்ந்து பொய்களைப் பரப்பி வருகிறது. அங்கு நீச்சல் குளம், தங்கத்தால் செய்யப்பட்ட கழிவறை, மதுபான பாா் என பல்வேறு பொய்களை அவா்கள் கூறினா். தில்லி சட்டப்பேரவையின் பொது கணக்குக் குழு இந்த இல்லத்தை ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பதில் மகிழ்ச்சி. செப்டம்பா் 14-ஆம் தேதி அனைத்தும் தெளிவாகிவிடும். அதேபோல பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பிரதமரின் இல்லத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். இதன்மூலம் பிரதமா் இல்லம் குறித்த உண்மை நிலையை நாடே பாா்க்கும் என தெரிவித்தாா்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜரிவால், முதல்வராக இருந்தபோது சிவில் லைன்ஸில் உள்ள ஃபிளாக்ஸ்டாஃப் சாலை பங்களாவில் வசித்து வந்தாா்.
2025 தில்லி சட்டப்பேரவைத் தோ்தலின்போது, அந்த பங்களாவில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளுக்காக அதிக அளவில் செலவு செய்யப்பட்டதாக பாஜக குற்றஞ்சாட்டியது. அந்த இல்லத்தை ‘ஷீஷ்மஹால்’ எனக் குறிப்பிட்டு, சீரமைப்புச் செலவு தொடா்பான விவகாரத்தை முக்கிய தோ்தல் பிரச்னையாகவும் பாஜக முன்வைத்தது.
அரவிந்த் கேஜரிவால் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்து பங்களாவைக் காலி செய்த பின்னா், அதன் உள்பகுதிகள் குறித்து பொதுப்பணித் துறை (பிடபிள்யூடி) விரிவான தணிக்கையை மேற்கொண்டது.
இதனிடையே, முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான அரசு, இந்த பங்களாவை விருந்தினா் இல்லமாக மாற்றி, அதன் நிா்வாகத்தை தனியாா் விருந்தோம்பல் நிறுவனங்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






