தாமிரபரணி தண்ணீர் விவசாயத்திற்கா, தொழிற்சாலைக்கா?

திருநெல்வேலி, டிச. 12: தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட விளைநிலங்கள் பாதிப்பட
Updated on
2 min read

திருநெல்வேலி, டிச. 12: தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட விளைநிலங்கள் பாதிப்படையும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

  தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக், டாக், ஸ்டெர்லைட், அனல் மின்நிலையம் உள்ளிட்ட 9 தொழிற்சாலைகளுக்கு "20 மில்லியன் கேலன் குடிநீர் திட்டம்' செயல்பாட்டில் உள்ளது. இதற்கான தண்ணீர் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் உள்ள வடகாலிலிருந்து செல்கிறது.

  இந்த தண்ணீர் செல்லும் வழிகளில் இழப்பு ஏற்படுவதாலும், தூத்துக்குடி

அனல் மின்நிலையத்தின் நான்காவது விரிவாக்க நிலைக்கு கூடுதலாக 3 மில்லியன் கேலன் தண்ணீர் தேவை இருப்பதாலும் 23 மில்லியன் கேலன் தண்ணீரை மூடிய குழாய் மூலம் கொண்டு செல்லும் திட்டம் ரூ.21.93 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது.

  ""இந்த திட்டத்திற்காக ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றின் நடுவில் 8 மீட்டர் ஆழத்தில் கிணறு அமைக்கப்பட்டு கரையில் நீரேற்று நிலையம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி பெரிய குழாய்கள் மூலம் பேட்மாநகரில் கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கத் தொட்டிக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து புவியீர்ப்பு விசையில் மஞ்சள்நீர்காயல் சென்று தற்போதுள்ள பாதை வழியாக தூத்துக்குடிக்கு செல்லும். இந்த திட்டப் பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளன'' என குடிநீர் வடிகால் வாரிய வட்டாரங்களில் கூறப்படுகிறது.

  விவசாயம் பாதிக்கும்: இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பாசன நிலங்கள் பாதிப்படையும் என விவசாயிகள் அபாயக் குரல் எழுப்புகின்றனர்.

       தாமிரபரணி ஆற்றில் உள்ள 8 அணைக்

கட்டுகள் மூலம் இரு மாவட்டங்களிலும் மொத்தம் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் உள்ள வடகால் மற்றும் தென்கால் மூலம் மட்டும் சுமார் 25,560 ஏக்கர் நிலங்கள் உள்ளன.

  தற்போது புதிய 23 மில்லியன் கேலன் திட்டத்திற்காக தாமிரபரணி ஆற்றின் நடுவிலே அமைக்கப்பட்டுள்ள உறைக் கிணறு, அணைக்

கட்டுக்கு மேல் பகுதியில் சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அந்த கிணற்றில் இருந்து ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுக்கும்போது ஆற்றில் தண்ணீர் குறைந்து கால்வாய்களுக்கான நீர்வரத்தும் குறையும். விவசாயம் பாதிக்கும் என்பது விவசாயிகளின் வாதம்.

  8 அடி ஆழத்திற்கு தண்ணீரைத் தேக்கும் திறன் கொண்ட ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரப்படாததால் அதில் தற்போது 2 அடி மட்டுமே தண்ணீரை தேக்க முடியும். இதனால் ஏற்கெனவே பாதிப்பு.

  தற்போது இந்த "23 மில்லியன் கேலன்' திட்டத்தால் மேலும் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கூறுகின்றனர்.  அதுமட்டுமன்றி திருச்செந்தூர்,

காயல்பட்டினம், ஆறுமுகனேரி, ஆத்தூர் மற்றும் 13 வழியோர கிராம கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான நீரேற்று நிலையமும் அருகிலேயே உள்ளது. அதுவும் பாதிப்புறும் என கவலை தெரிவிக்கின்றனர்.

  தூத்துக்குடியில் பெருகி வரும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளித்து பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால் திருநெல்வேலி மாவட்ட விவசாயம் பாதிக்கும் அபாயமும் உள்ளது என்பது அவர்களின் கருத்து.

  கடல்நீரை சுத்திகரிக்க யோசனை: பருவ மழை குறைந்து வருவதால் தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தில் முப்போகம் என்பதெல்லாம் பழங்கதையாகி விட்டது. இருபோக நிலங்களும் வெகுவாகக் குறைந்து வருகின்றன. ஒரு போகத்தை மட்டுமே விவசாயிகள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

  அதற்கும் இப்போது பாதிப்பை ஏற்படுத்தும் இந்த "23 மில்லியின் கேலன்' திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

  இல்லையென்றால் போராட்டமே தீர்வு

என்கிறார் இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த விவசாயிகளை ஒருங்கிணைத்து வரும் பாமக கொள்கை விளக்க அணித் தலைவர் அ. வியனரசு.  இந்த திட்டத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாது என்ற குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் கருத்தை விவசாயிகள் ஏற்பதாக இல்லை.

  கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு பேச்சிப்பாறை அணைக்கட்டில் இருந்து தண்ணீர் எடுக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது அந்த திட்டத்திற்கு கடல் நீரை சுத்திகரித்துப் பயன்படுத்துகின்றனர். அதேபோல், தூத்துக்குடி தொழிற்சாலைகளும் அருகிலேயே கிடைக்கும் கடல்நீரை சுத்திகரித்துப் பயன்படுத்தலாம் என்பது

அவர்கள் வலியுறுத்தும் யோசனை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com