/

ஆலங்குளம் தொட்டியான்குளம் பகுதியில் புதிய பஸ் நிலையம் உருவாக்கப்படுமா?

ஆலங்குளம்,பிப்.11: ஆலங்குளத்தில், பிரதான சாலையில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தொட்டியான்குளம் பகுதியில்,புதிய பஸ் நிலையம்  அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  மாவட்டத்தின் முக்கிய நகரங்க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:15 am

வை. இராமச்சந்திரன்

ஆலங்குளம்,பிப்.11: ஆலங்குளத்தில், பிரதான சாலையில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தொட்டியான்குளம் பகுதியில்,புதிய பஸ் நிலையம்  அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கும் ஆலங்குளத்தில், ஆரம்ப காலங்களில் தொட்டியான்குளம் அருகே,சிறிய பஸ் நிழற்குடை மட்டுமே இருந்தது.

 காலப் போக்கில், பெருகி வந்த போக்குவரத்தின் காரணமாக, பிரதான சாலையில், ஆலங்குளத்தின் மேற்கு பகுதியில், 1983 ல் ஒரு ஏக்கர் 4 சென்ட் நிலப்பரப்பில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டது.

 அப்போதைய தேவைக்கு ஏற்ப விரிவாகக்  கட்டப்பட்ட பஸ் நிலையத்தில், பேரூராட்சி நிர்வாகம் வருமானத்தை மட்டும் கவனத்தில் கொண்டு, பஸ் நிலையத்தைச் சுற்றி மூன்று பகுதிகளிலும் கடைகளைக் கட்டி, வாடகைக்கு விட்டது. அதோடு பஸ் நிலையம் உள்பகுதியிலும் கடைகள் வாடகைக்கு விடப்பட்டன.     

  பஸ் நிலையத்திற்குள் கடைக்காரர்கள் பெரும்பாலானோர், முன்பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துக் கொண்டதாலும்,பஸ் நிலையத்திற்குள்  சைக்கிள், மோட்டார்சைக்கிள்களை நிறுத்துவதால் பஸ் நிலையம் சுருங்கிக் கொண்டே வருகிறது.

 இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. பஸ்களை சரியாக நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல முடிவதில்லை. அதோடு மினிபஸ், டவுன்பஸ், தனியார்பஸ் போன்ற வாகனங்களை சிறிது நேரம் நிறுத்தி வைத்து, சரியான நேரத்திற்கு எடுத்து செல்வதற்கு போதிய இடம் வசதி இல்லை. ஆலங்குளம் பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் சுமார் 120 பஸ்கள் வந்து செல்கின்றன. தினந்தோறும் சுமார் 30 ஆயிரம் பயணிகள் வந்துச் செல்கின்றனர்.  வருங்காலங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் போதிய இடவசதி இல்லை.

 எனவே நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்திற்கு ஏற்பவும், நெருக்கடியான நேரங்களில் பொதுமக்கள் உட்கார்ந்து செல்வதற்கும் ஏற்ற அளவில் இந்த பஸ் நிலையத்திற்குள் இடம் இல்லை.

  இச்சூழ்நிலையில், பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் நிறுத்தி, எடுத்துச் செல்லும் வகையிலும், அதிகளவில் பஸ் பயணிகள் உட்கார்ந்து செல்லும் வகையிலும் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது.

 இதன் அடிப்படையில், தொட்டியான்குளம் பகுதியானது புதிய பஸ் நிலையம் கட்ட தேவையான அளவு இடம் கொண்டதாக அமைந்துள்ளது. தொட்டியான்குளம் 88.38 ஏக்கர் பரப்பளவு கொண்டது.  குளத்தின் மூலம் பாசன வசதி பெறக்கூடிய நிலங்களோ 68.39 ஏக்கர்தான். குளத்தின் பரப்பளவை காட்டிலும், பயன்பெறும் நிலத்தின் பரப்பளவு குறைவாகவே உள்ளது.      

 சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை ஆய்வு செய்து,தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளை அகற்ற வேண்டும். குளத்தை உடன் தூர்வார வேண்டும்.

 நீர் நிலைக்காக தூர்வாரப்படும் பகுதிகள் போக, எஞ்சிய நிலத்தை,அரசின் நலத் திட்டங்களை நிறைவேற்றப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  

 தொட்டியான்குளம் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமையும் பட்சத்தில்,போக்குவரத்திற்கு ஏற்படும் சிரமம் குறையும். மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள்,கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கும்,வர்த்தகர்களுக்கும் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

 அரசு போக்குவரத்து பணிமனை, நீதிமன்றங்கள், மகளிர் மேல்நிலைப் பள்ளி போன்றவைகள் அமைக்க பல்வேறு அரசியல் அமைப்புகள் முயன்று வருகின்றன.  

 இதனால் போக்குவரத்து கூடுதலாகும் வாய்ப்பும் அதிகரிக்கும். எனவே அரசு இதை கவனத்தில் கொண்டு, தொட்டியான்குளம் பகுதியில் சுமார் 10 முதல் 12 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய பஸ்நிலையம் அமைத்து, அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் பயனளிக்குமாறு செய்ய வேண்டும் என கோரிக்கை வலுவடைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.