தபால் புக்கிங்கில் கவனம்: பட்டுவாடாவில் தாமதம்
ஆலங்குளம்,ஜன.29: திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில், தனியார் கூரியர் நிறுவனங்கள் தபால்களை புக்கிங் செய்வதில் காட்டும் ஆர்வத்தை பட்டுவாடா செய்வதில் காட்டுவதில்லை. இதில் ஏற்படும் காலதாமதத்தால் பொதுமக்க


ஆலங்குளம்,ஜன.29: திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில், தனியார் கூரியர் நிறுவனங்கள் தபால்களை புக்கிங் செய்வதில் காட்டும் ஆர்வத்தை பட்டுவாடா செய்வதில் காட்டுவதில்லை. இதில் ஏற்படும் காலதாமதத்தால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.
ஆலங்குளத்தில், நான்கு தனியார் கூரியர் நிறுவனங்களின் கிளைகள் உள்ளன. இவற்றில் காலை 10 மணி முதல் மாலை 6.30 வரை தபால்கள் புக்கிங் செய்யப்படுகின்றன.
ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார மக்கள், வியாபாரிகள், மாணவ, மாணவிகள், பதிவு அஞ்சல் அனுப்ப வேண்டுமானால் ஆலங்குளம் அஞ்சலகத்தில் காலை 7 முதல் 11 மணி வரையிலும், பிற்பகல் 2 முதல் 3.30 வரை மட்டுமே அனுப்ப முடியும். சாதாரண தபால்களும் மாலை 3.30 வாக்கில் தபால் பெட்டியில் இருந்து எடுத்துச் செல்லப்படுகின்றன.
இதனால், சாதாரண தபால் கட்டணத்தை விட, கூரியர்களின் கட்டணம் கூடுதலாக இருந்தாலும் கூட தபால்கள் விரைவாகக் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், மக்களும் தனியார் கூரியர் நிறுவனங்களையே நாடுகின்றனர்.
ஆலங்குளத்தில், பேருந்து நிலையத்தைச் சுற்றியே இத்தகைய கூரியர் நிறுவனங்களின் கிளைகள் உள்ளன. இதில் பிரதான கூரியர் நிறுவனத்தில், தினந்தோறும் சுமார் 200-க்கும் அதிகமான தபால்கள் புக்கிங் செய்யப்படுகின்றன. பிற நிறுவனங்களும் சுமார் 25 முதல் 50 தபால்கள் வரை புக்கிங் செய்து கொள்கின்றன.
இவர்களுக்கு வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், அரிசி, எண்ணெய் ஆலைகள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் முக்கிய வாடிக்கையாளர்கள்.
மாலை 6.30 வரை தபால்களை புக்கிங் செய்துகொள்ளும், இத்தகையை நிறுவனங்கள், ஆலங்குளத்துக்கு பட்டுவாடாவுக்காக வரக்கூடிய தபால்களை, வங்கிகள் உள்ளிட்டவைகளுக்கு காலை சுமார் 11.30-க்குள்ளும், முக்கிய நபர்களுக்கு சரியான நேரத்திலும் பட்டுவாடா செய்துவிட்டு, பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் மாலை 4-லிருந்து 6 மணி வரை தாமதமாக பட்டுவாடா செய்து வருகின்றன.
இவர்கள் புக்கிங்கில் செலுத்தும் கவனத்தை பட்டுவாடாவில் செலுத்துவதில்லை.இதனால் அவரசரத்துக்காக அனுப்பப்படும் தபால்கள், மாலை வரை மிக தாமதமாகக் கிடைப்பதால், வங்கிக் காசோலை, வரைவோலை உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கும் பொதுமக்கள், வங்கி நேரம் முடிந்து மறுநாளே வங்கிக்கு கொண்டு சென்று மாற்ற முடியும். சனிக்கிழமையாக இருந்தால் திங்கள்கிழமைதான் வங்கிகளுக்குச் செல்ல முடியும்.
இது போன்று, முக்கிய கோப்புகள், பாலிசி பத்திரங்கள் உள்ளிட்டவை தாமதமாக கிடைக்கும் போது, தனியார் நிறுவனங்களுக்கும் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன. ஆலங்குளம் பிரதான சாலைகளில் பட்டுவாடா செய்யவே இந்த நிலைமை என்றால், அருகில் உள்ள கிராம மக்களுக்கு பட்டுவாடா செய்வது மேலும் தாமதமடைகிறது.
ரூ.20 செலுத்தும் பொதுமக்களின் தபாலை பட்டுவாடா செய்வதில் காலதாமதம் செய்யும் கூரியர் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவற்றுக்கு, குறைந்த கட்டணத்தில் புக்கிங் செய்வதோடு,காலை 11.30 மணிக்குள் பட்டுவாடாவும் செய்து விடுகின்றன. இதில் அலட்சியப்படுத்தப்படுபவர்கள் அப்பாவி மக்களே.
அரசும், கூரியர் நிறுவனங்களில் ஏதோ நடக்கிறது என எண்ணாமல், கூரியர் நிறுவன
செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும். தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கூடுதல் கட்டண வசூல் பிரச்சனையில் எப்படி அக்கறை செலுத்தியதோ, அதே போன்று கூரியர் நிறுவனங்களின் நடவடிக்கைகளிலும் தலையிட்டு பொதுமக்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டும். அவற்றை வரைமுறைப் படுத்த வேண்டும். வசூலிக்கும் தொகையிலிருந்து, பட்டுவாடா செய்யப்படும் நேரம் வரை தெளிவாக வரையறுக்க வேண்டும். இல்லையென்றால் தனியார் கூரியர் நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல் வசூலிப்பதையும், தேவைப்படும் நேரத்தில் பட்டுவாடா செய்வதையும் தடுக்க முடியாது. தனியார் துறையானாலும் பிரச்னைக்குத் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...