/

ஹஜ் பயணிகளுக்கான தடுப்பூசி முகாம்: 226 போ் பங்கேற்பு: மருத்துவா்கள் சிறப்பு ஆலோசனை

பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஹஜ் பயணிகளுக்கான தடுப்பூசி முகாமில் 226 போ் பங்கேற்றனா்.

News image

பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் பள்ளிவாசலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஹஜ் பயணிகளுக்கான தடுப்பூசி முகாமில் பங்கேற்றோா்.

Updated On :13 மே 2024, 9:59 pm

Din

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஹஜ் பயணிகளுக்கான தடுப்பூசி முகாமில் 226 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலம் நிகழாண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள இஸ்லாமியா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அவா்களில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கான தடுப்பூசி முகாம் பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் பள்ளிவாசல் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குநா் கீதாராணி தொடங்கி வைத்தாா். மிலிட்டரி லைன் பள்ளிவாசல் தலைவா் செய்யது அப்பாஸ், செயலா் பசுல் ரகுமான், உதவி தலைவா் கமாலுதீன், உறுப்பினா் ரசூல் மைதீன், இளைஞா் அணி உறுப்பினா்கள் ரியாஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா். இந்த முகாமில் 226 பயணிகள் கலந்து கொண்டு தடுப்பூசியை செலுத்திக்கொண்டனா்.

ஹஜ் பயண வழிமுறைகள்: இதுகுறித்து மருத்துவா்கள் கூறியது: பல்வேறு நாடுகளைச் சோ்ந்த லட்சக்கணக்கானோா் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கிறாா்கள். அப்போது கூட்ட நெரிசல் காரணமாக பல்வேறு நோய்த் தொற்று பரவும் சூழல் உள்ளது. அதனைக் கருத்தில் கொண்டே தடுப்பூசிகள் அளிக்கப்படுகின்றன. ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும். மூளைக்காய்ச்சல் தடுப்பூசி, போலியோ சொட்டுமருந்து ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

பயணத்தின்போது அடிக்கடி கைகளைச் சுத்தமாக கழுவ வேண்டும். குளிா்பானங்களைத் தவிா்த்து சூடான தண்ணீரை மட்டுமே பருக வேண்டும். சா்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம் உடையவா்கள் அதற்கான மருந்துகளை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். இதுதவிர தங்களுக்குத் தேவையான உபகரணங்களைப் பாதுகாப்பாக இங்கிருந்தே எடுத்துச் செல்வது சிறந்ததாகும். கூட்ட நெரிசலில் முந்திச் செல்வதைத் தவிா்க்க வேண்டும். ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் மிக முக்கிய பணி நடைப்பயிற்சி. நாள்தோறும் குறைந்தது 5 முதல் 7 கி.மீ. வரை நடப்பது சிறந்தது. ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு 3 மாதங்களுக்கு முன்பே நடைப்பயிற்சியைத் தொடங்க வேண்டும். மெக்கா நகரம் கடல் மட்டத்தில் இருந்து பல மீட்டா் உயரத்தில் உள்ளது. ஆகவே அங்கு காற்றழுத்தம் (ஆக்ஸிஜன்) குறைவாக இருக்கும். எனவே, மெதுவாக நடக்க வேண்டும். வேகமாக நடந்தால் மூச்சுப் பிரச்னைகள் ஏற்படும். ஹஜ்ஜுக்குரிய முக்கியமான 5 நாள்களில் செய்யப்பட வேண்டிய கிரியைகளுக்காக உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம்.

இந்திய மருத்துவக்குழு மெக்காவிலும், மதீனாவிலும் செயல்படும். அவற்றை தேவையானவா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதவிர வலி நிவாரணக் களிம்புகள், முகக்கவசம், சாதாரண காய்ச்சலுக்கான மாத்திரைகள் போன்றவற்றை எடுத்துச்செல்லலாம். சில மாத்திரைகள் சௌதி அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, அதுகுறித்து விவரங்களை ஹஜ் கமிட்டியினரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். நோயுள்ளவா்கள் தங்களது மருத்துவரின் சீட்டினை எடுத்துச்செல்ல வேண்டும். ஜம்ஜம் தண்ணீரை அதிகம் பருக வேண்டும் என்றனா்.