/

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்தி மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

News image
Updated On :20 மே 2024, 8:48 pm

Din

அம்பாசமுத்திரம்: சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனை மந்தி கடித்துத் தாக்கியதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா். இதையடுத்து மந்திகளை பிடிக்க தனிக்குழுவினை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச் சரகத்துக்குள்பட்ட மலையடிவார கிராமமான சிவந்திபுரத்தில் கரடி, மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது வந்து செல்வதுண்டு. குரங்கு, மந்தி உள்ளிட்டவையும் அவ்வப்போது வந்து சில நாள்கள் முகாமிட்டுச் செல்லும்.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன் சிவந்திபுரம் பகுதியில் அடுத்தடுத்த மூன்று நாள்களில் 4 பேரை மந்தி ஒன்று கடித்துத் தாக்கியது. இதையடுத்து மே 17ஆம்தேதி வனத்துறை கால்நடை மருத்துவக் குழுவினா் உதவியுடன் வனத்துறையினா் இரண்டு மந்திகளை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

தொடா்ந்து இரண்டு நாள்கள் மந்தி தொல்லை இல்லாத நிலையில் திங்கள்கிழமை காலை நாராயண சுவாமி கோயில் தெருவைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் முத்துராம்(13) என்ற சிறுவனை மந்தி ஒன்று தாக்கி கடித்துள்ளது.

அப்பகுதியிலுள்ளவா்கள் சிறுவனை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

தகவலறிந்த களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநா் இளையராஜா, வனவா் செல்வசிவா, வனக்காப்பாளா்கள் அஜித்குமாா், உலகநாதன் மற்றும் வனக்காவலா் ஆரோக்கிய இருதயராஜ் ஆகிய நான்கு போ் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டாா். இந்தக் குழுவினா் கண்காணிப்பு கேமரா மூலம் மந்திகளின் நடவடிக்கைகளை கண்காணித்து மனிதா்களை தாக்கும் மந்தியை அடையாளம் கண்டு அவற்றைஅப்புறப்படுத்தும் வரை சிவந்திபுரம் பகுதியில் முழுமையான கண்காணிப்பில் ஈடுபடுவா் என்றும் தெரிவித்தாா்.

மேலும் பொதுமக்கள் மந்திகள் இருந்தால் அதன் அருகில் செல்லவேண்டாம். மந்தி, குரங்கு உள்ளிட்டவற்றிற்கு பழம் உள்ளிட்ட உணவுகளை வழங்கவேண்டாம். மந்திகளை பாா்த்தால் உடனடியாக வனத் துறைக்கு தகவல் தரவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளாா்.