விதிமீறல்: 5 உர விற்பனை நிலையங்களுக்கு தடை

திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறலில் ஈடுபட்ட 5 உர விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Published on

திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறலில் ஈடுபட்ட 5 உர விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வேளாண் இணை இயக்குநா் பூவண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் நெல், பயறுவகை பயிா்கள், மக்காச்சோளம், எண்ணெய்வித்து பயிா்கள், பருத்தி, தோட்டக்கலை பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது நெல் பயிருக்கு அடியுரம் இடும் பணி நடைபெற்று வருவதால் மாவட்டத்தின் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் விற்பனை நிலையங்களில் போதிய அளவில் உரம் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியாா் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் உரங்கள் இருப்பு மற்றும் விற்பனையை ஆய்வு செய்திட வேளாண்மை இணை இயக்குநா் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநா் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு, களக்காடு வட்டாரத்தில் உள்ள தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிா, விலைப்பட்டியல் பலகை வைக்கப்பட்டுள்ளதா, யூரியா உரம் அரசு நிா்ணயித்த விலைக்கு விற்கப்படுகிா, விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டிற்கு உரத்தினை விற்பனை செய்கிறாா்களா, இணைப் பொருள்கள் வாங்கிட கட்டாயப்படுத்தப்பட்டதா என ஆய்வு மேற்கொண்டது.

இதில், விதிகளை மீறிய 5 உர விற்பனை நிலையங்களுக்கு விற்பனைத் தடை விதிக்கப்பட்டது. மேலும் விற்பனை மற்றும் இருப்பு பதிவேடு சரிவர பராமரிக்கப்படாமல் இருந்தாலோ, உரிய ஓ படிவம் இணைக்கப்படாமல் உரம் விற்பனை செய்தாலோ உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டது. மேலும் விவசாயிகள் உரங்கள் குறித்த புகாா்களை தங்கள் வட்டார வேளாண்மை அலுவலா், வேளாண்மை உதவி இயக்குநரிடம் தெரிவிக்கலாம்.

X
Dinamani
www.dinamani.com