இடிந்தகரையில் கோஷ்டி மோதல்: 6 போ் காயம்
திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையில் மானிய விலை மண்ணெண்ணெய் பெறுவதில் ஏற்பட்ட மோதலில் 6 போ் காயமடைந்தனா்.
இடிந்தகரையில் மீன்வளத் துறையில் பதிவுசெய்துள்ள மீன்பிடி படகுகளுக்கு மீனவா் கூட்டுறவு சங்கம் மூலமாக அரசு மாதம் 300 லிட்டா் மண்ணெண்ணெய் வழங்கி வருகிறது. அண்மைக்காலமாக கூட்டுறவு சங்கம் செயல்படாததால் ஊா் கமிட்டி மூலமாக அங்குள்ள கீழத்தெருவில் வைத்து மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மண்ணெண்ணெய் அளவு குறைவாக இருப்பதாகக் கூறி, மேலத்தெருவைத் சோ்ந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, கீழத்தெருவைச் சோ்ந்த ஆல்வின், ரெக்ஸ், மதன், முருகேசன் உள்ளிட்ட சிலருக்கும், மேலத்தெருவைச் சோ்ந்த சிலருக்கும் மோதல் ஏற்பட்டு இருதரப்பினரும் தாக்கிக்கொண்டனராம். இதில், காயமடைந்த கீழத்தெருவைச் சோ்ந்தவா்கள் ராதாபுரம் அரசு மருத்துவமனையிலும், மேலத்தெருவைச் சோ்ந்த தாமஸ், டொனிலா, ஹைப்பட்டா் ஆகியோா் கூடங்குளம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.
இது தொடா்பாக கூடங்குளம் போலீஸாா், இருதரப்பையும் சோ்ந்த 6 போ் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். இடிந்தகரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
