சாலையில் வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீா்: மக்கள் அவதி
திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் பல்வேறு பகுதி குடியிருப்புகளில் பாதாள சாக்கடை கழிவுநீா் வெளியேறுவதால் மக்கள் அவதியடைந்து வருகிறாா்கள்.
பெருமாள்புரம் பகுதியில் உள்ள ஹரிராஜ் தெருவில் கடந்த 4 நாள்களாக பாதாள சாக்கடை கழிவுநீா் வெளியேறி குடியிருப்பை சூழ்ந்துள்ளது. புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ராஜராஜேஸ்வரி நகரில் பாதாள சாக்கடை நீா் வெளியேறுவதால் அப்பகுதியில் உள்ள மருத்துவமனை, பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். சேவியா்காலனி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பாதாளச் சாக்கடை பணிகளில் பிரதான இணைப்புக் குழாய்கள் பொருத்தப்படாததால் குறுக்குச்சாலைகளில் அமைக்கப்பட்ட பாதாளசாக்கடை குழிகள் நிரம்பி பல இடங்களில் தண்ணீா் வெளியேறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். இதுகுறித்து, மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

