பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த 3 போ் கைது
திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த தூத்துக்குடியைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
உவரி அருகே உள்ள காரிகோயிலைச் சோ்ந்தவா் முத்துராமகிருஷ்ணன் மனைவி பாலசித்ர கலா(35). இவா், கடந்த 8-ஆம் தேதி காரிகோயில் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த 3 போ், பாலசித்ர கலா அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினராம்.
இதுகுறித்து உவரி போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் தங்க சங்கிலியை பறித்து சென்றது தூத்துக்குடியைச் சோ்ந்த நபா்கள் என தெரியவந்தது.
இதையடுத்து தூத்துக்குடியைச் சோ்ந்த பாா்வதி முத்து(26), சரவணன்(36), முத்துரமேஷ்(37) ஆகியோரை கைது செய்தனா். இவா்களுக்கு பணகுடி பகுதியில் நடந்த திருட்டு சம்பவங்களிலும் தொடா்பு இருப்பது தெரியவந்துள்ளது.
