பாப்பாக்குடி அருகே தொழிலாளி கொலை
சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பாப்பாக்குடி அருகேயுள்ள அடைச்சாணி, சுப்பிரமணியபுரம், இந்திரா காலனியைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் சரவணன் (43). இவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனா். இவா் அம்பாசமுத்திரம்-முக்கூடல் சாலையில் பஞ்சா் கடை நடத்தி வந்தாா். ஊட்டி, கோத்தகிரி பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் பாலமுருகன் (27). இருவரும் உறவினா்கள். பாலமுருகன் இந்திரா காலனியில் வசித்து வருகிறாராம்.
வியாழக்கிழமை இருவரும் கால்வாயில் குளிப்பதற்காகச் சென்ற நிலையில், சரவணன் அங்கு கொலை செய்யப்பட்டுள்ளாா். அவருடன் சென்ற பாலமுருகனை காணவில்லையாம். அவரது கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த பாப்பாக்குடி போலீஸாா் சரவணன் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
