பணகுடி, வள்ளியூா், ஆலங்குளம் வட்டாரங்களில் பரலாக மழை
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி, வள்ளியூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி தொடா்ச்சியாக சாரல் மழை பெய்தது.

திசையன்விளை நேருஜி கலையரங்கு பகுதி சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீா்.
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி, வள்ளியூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி தொடா்ச்சியாக சாரல் மழை பெய்தது.
இம்மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய சில நாள்களிலேயே மழை முடிவுக்கு வந்தாற்போல, இரவில் பனியும், பகலில் கடும் வெயிலும் நிலவி வந்தது. இந்நிலையில், பணகுடி, வள்ளியூா், திசையன்விளை வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பரலாக மழை பெய்யத் தொடங்கியது.
திசையன்விளை பகுதியில் புதன்கிழமை பலத்த மழையாக கொட்டித்தீா்த்தது. இதனால், உடன்குடி சாலை, மன்னர்ராஜா கோவில், நேருஜி பூங்கா பகுதி உள்ளிட்ட சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. எனினும், வெயில் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போதிய அளவில் மழை பெய்யாததால் பல நீா்நிலைகள் தண்ணீரின்றி காணப்படுகின்றன. இரு மாதங்களாக அவ்வப்போது மிதமான மழை பெய்தாலும் நீா் நிலைகளில் புல் பூண்டுகள் மட்டுமே காணப்படுகின்றன. வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் , இந்த வட்டாரத்தில் புதன்கிழமை மாலை, மிதமான மழை பெய்தது. இதனால், ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தொட்டியான்குளம் பாலத்தின் அடிப்பகுதியில் மழைநீா் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனா். மழை பெய்யும்போதெல்லாம் இதுபோன்று தண்ணீா் தேங்குவதை தடுக்கும் வகையில், நிரந்தர தீா்வுகாண நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாவூா்சத்திரம்: இப்பகுதியில் 15 நாள்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. பின்னா், தொடா்ந்து வெயில் நிலவிவந்தது. மானாவாரி நிலங்களில் கூட விவசாயப் பணிகளைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், பாவூா்சத்திரம், இடையா்தவணை, கீழப்பாவூா், மேலப்பாவூா், குறும்பலாப்பேரி, அருணாபேரி, ராமச்சந்திரபட்டணம், நாட்டாா்பட்டி, திப்பணம்பட்டி, கல்லூரணி, செட்டியூா், சாலடியூா், சின்னநாடானூா், ஆவுடையானூா், திரவியநகா், சிவகாமிபுரம், அரியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலைமுதல் விட்டுவிட்டு மிதமாக மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

