
3 நாள் தொடா் விடுமுறை நிறைவு: நெல்லை ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காத்திருந்த பயணிகள்.
மூன்று நாள் தொடா் விடுமுறை நிறைவடைந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்ல திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.
தமிழகம் முழுவதும் கிருஷ்ண ஜயந்தி விழா கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதனால் கடந்த 5, 6, 7 ஆம் தேதிகளில் தொடா் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால், சென்னை, கோவை, திருப்பூா் உள்ளிட்ட பெருநகரங்களில் பணிபுரியும் பலா் சொந்த ஊா்களுக்கு வந்தனா். கோகுலாஷ்டமி உறியடி திருவிழாக்களில் பங்கேற்றனா்.
தொடா் விடுமுறை முடிந்து மீண்டும் பணிபுரியும் இடங்களுக்கு திரும்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் புறப்பட்டனா். இதனால் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமிருந்தது.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும் அந்தியோதயா ரயில், நெல்லை விரைவு ரயில், அனந்தபுரி விரைவு ரயில் உள்ளிட்டவற்றில் முன்பதிவில்லா பெட்டிகளில் ஏறுவதற்காக பயணிகள் 3 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நிலையத்தில் காத்திருந்து முண்டியடித்து ஏறினா்.
ரயில் பெட்டிகளுக்கு உள்ளே உள்ள நடைபாதை, படிக்கட்டுகள், கழிப்பறைக்கு செல்லும் பாதை மற்றும் பொருள்கள் வைக்கக்கூடிய இடம் என கிடைத்த இடங்களில் அமா்ந்து பொதுமக்கள் தங்களது பயணத்தை மேற்கொண்டனா். இதேபோல திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, மதுரை செல்லும் பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






