கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சாலைகளைச் சீரமைக்க வலியுறுத்தி, குலசேகரத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 29) மறியல் போராட்டம் நடத்தப்படும் என மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பத்மநாபபுரம் தொகுதிக்குள்பட்ட பல்வேறு சாலைகள் சீர்குலைந்து அபாயகரமாக உள்ளன. குறிப்பாக குலசேகரம் பகுதி, ஆற்றூர் - தேமானூர், ஆற்றூர் - மூவாற்றுமுகம், புளியிறங்கி - கொல்வேல், திருவரம்பு - செம்மண்தறை - பாலாங்கோணம், அஞ்சுகண்டரை, திருவட்டாறு - மாத்தூர், சித்திரங்கோடு ஆகியவற்றுக்கு இடையேயான சாலைகளும், கிராமப் பகுதி சாலைகளும் போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளன.
இத்தகைய சாலைகளில் புழுதி பறப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. விபத்துகளும், வாகனப் பழுதும் ஏற்படுகின்றன.
இதனிடையே, குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில் சீரமைக்கப்பட்ட சாலைகள் குறுகிய நாள்களில் பழுதாகியுள்ளன. முறைகேடுகள் செய்து தரமற்ற சாலைகளை அமைப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிதியில் 2 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்ட நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை கூட இதுவரை 6 முறை பழுதடைந்து, சீரமைக்கப்பட்டுள்ளது.
வேர்கிளம்பி- ஆற்றூர் சாலையை தரமாக அமைக்காததால், பொதுமக்களே சாலைப் பணியை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறியும், இதுவரை மேல்நடவடிக்கை இல்லை.
எனவே, காவல்ஸ்தலம் - உண்ணியூர் கோணம், திற்பரப்பு- அஞ்சு கன்டறை, ஆற்றூர் - தேமானூர் - குட்டக்குழி போன்ற சாலைகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும்; தரமற்ற ஆற்றூர்- வேர்கிளம்பி சாலைப் பணி குறித்து விசாரிக்க வேண்டும்; கேரளத்துக்கு கனிம வளம் கடத்தப்படுவதை தடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களை திரட்டி குலசேகரம் அரசு மூடு சந்திப்பில் டிச. 29 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சாலை மறியலில் ஈடுபடவுள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.