இந்தியாவில் உள்ள 22 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் முகிலை ராசபாண்டியன்.
நாகர்கோவிலில் திருக்குறள் வாழ்வியலாக்கப் பயிற்சி மையமான குறளகத்தின்சார்பில், திருவள்ளுவர் தின விழா ஐம்பெரும்விழாவாக நடைபெற்றது. விழாவுக்கு, ஈரோடு தமிழ் சங்கப் பேரவை சேலம் பாலன் தலைமை வகித்தார். ராஜ்குமார் திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்தார். உலகத்திருக்குறள் மைய தென்னிலை ராம.கோவிந்தன் தொடக்க உரையாற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், குறளகம் நிறுவனர் தமிழ்க்குழவி எழுதிய குறள் மணமாலை என்ற நூலை, முனைவர் ஜீவா வெளியிட முனைவர் பத்மவிலாசினி பெற்றுக்கொண்டார்.
கல்வி விழாவுக்கு, தமிழக அரசு தமிழ்வளர்ச்சித்துறை துணை இயக்குநர் பசும்பொன் தலைமை வகித்தார். சுங்கவரித்துறை மத்திய தீர்ப்பாயத்தின் துணைத்தலைவர் ராசேந்திரன் வாழ்த்திப் பேசினார்.
நிகழ்ச்சியில், நிகழாண்டு 1330 குறள்பாக்களையும் மனனம் செய்து ஒப்பித்து அரசுப் பரிசுக்கு தேர்வான மாணவிகள் மீனா, ரேணுகாதேவி, சூர்யா, காயத்ரி ஆகியோருக்கு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் முகிலை ராசபாண்டியன் பரிசுகள் வழங்கிப் பேசியதாவது:
திருக்குறளை உலகப் பொதுமறை என்கிறோம். அதே வேளையில் திருக்குறளை உலகின் அனைத்து நாடுகளுக்கும், அனைத்து மொழிகளுக்கும் எடுத்துச் சென்றால்தான் உண்மையாகவே அது உலகப் பொதுமறையாக மாறும். திருக்குறள் இதுவரை உலகில் 80 மொழிகளில் மட்டுமே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக மத்திய அரசிடம் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை நாம் முன்வைத்து வருகிறோம். தற்போது இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்கும் பணியினை மத்திய அரசு ,செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திடம் அளித்துள்ளது.
இந்நிலையில் தற்போது தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, மணிப்பூரி, குஜராத்தி, இந்தி ஆகிய 6 மொழிகளில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் சார்பில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இன்னும் ஓராண்டில் பிற மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்ப்பு செய்து விடுவோம். திருக்குறளை உலகப் பொதுமறையாக அறிவிக்கும் வகையில் யுனஸ்கோ நிறுவனத்திற்கு தமிழக இலக்கிய அமைப்புகளும், தமிழக அரசும் தொடர்ந்து கோரிக்கை வைக்க வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், 1330 குறள்பாக்களுக்கும் ஓவியம் தீட்டிய விருதுநகர் ஹேமசௌந்தரி, குறள்பாக்களாலேயே வள்ளுவர் படம் வரைந்த சேலம் கமலக்கண்ணன் ஆகியோருக்கு குறளோவியச் செல்வி, குறளோவிய செல்வர் விருதுகளை சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் வழங்கி பாராட்டினார். விழாவில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி விஞ்ஞானி விஸ்வரூபன் பாராட்டப்பட்டார்.
விழாவில், அகில இந்திய பேனா நண்பர் பேரவைத் தலைவர் கருண், வள்ளலார் பேரவை சுவாமி பத்மேந்திரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மூத்த வழக்குரைஞர் ரத்தினசாமி நிறைவுரையாற்றினார்.
நிகழ்ச்சிகளை கவிஞர் தங்கத்துமிலன், கடிகை ஆன்றனி ஆகியோர் தொகுத்து வழங்கினர், குறளக நிறுவனர் தமிழ்க்குழவி நன்றி கூறினார்.