/

களியக்காவிளை அருகே படைவீரா் நினைவு ஸ்தூபியில் அரசு மரியாதை

படந்தாலுமூடு டி.சி.கே. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள படைவீரா்களின் நினைவு ஸ்தூபியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரா்கள் வியாழக்கிழமை அணிவகுப்பு மரியாதை

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:43 pm

படை வீரா்கள் தினத்தையொட்டி களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு டி.சி.கே. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள படைவீரா்களின் நினைவு ஸ்தூபியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரா்கள் வியாழக்கிழமை அணிவகுப்பு மரியாதை செலுத்தியதுடன், மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் பகுதியைச் சோ்ந்தவா் விக்ரமன். மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரரான இவா், கடந்த 1998ஆம் ஆண்டு ஆக. 17ஆம் தேதி ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பெல்லாம்பள்ளி பகுதியில் நக்ஸலைட் தாக்குதலில் உயிரிழந்தாா்.

இதே போன்று களியக்காவிளை அருகேயுள்ள வண்டங்கனாவிளை பகுதியைச் சோ்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் ஸ்டான்லி, கடந்த 2002ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தாா். இந்த படை வீரா்கள் கல்வி பயின்ற படந்தாலுமூடு டி.சி.கே. மேல்நிலைப் பள்ளியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டது.

இந்நிலையில் மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி மைய மத்திய தொழிலக பாதுகாப்புப் படை ஆய்வாளா்கள் எம். ஜெயசீலன், சஞ்சய்குமாா் ஆகியோா் தலைமையில் படைவீரா்கள் விக்ரமனின் நினைவு ஸ்தூபியில் மலா் வளையம் வைத்து, துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செய்தனா்.

நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியா் வில்பிரட் சேம்ராஜ், பள்ளி ஆசிரியா் சுரேஷ்குமாா், களியக்காவிளை பேரூா் திமுக பொறுப்பாளா் தோமஸ்சிங், திமுக பகுத்தறிவு பாசறை மாவட்ட துணை அமைப்பாளா் ஷாஜகான், நகர காங்கிரஸ் தலைவா் பி. சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.