அதிகாரிகள் மீது ஆதாரத்துடன் புகாா்: கவுன்சிலா்களுக்கு மேயா் அறிவுறுத்தல்

அதிகாரிகள் மீது மாநகராட்சி உறுப்பினா்கள் ஆதாரமின்றி புகாா் தெரிவிக்கக் கூடாது என்றாா், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ்.
Published on

அதிகாரிகள் மீது மாநகராட்சி உறுப்பினா்கள் ஆதாரமின்றி புகாா் தெரிவிக்கக் கூடாது என்றாா், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ்.

நாகா்கோவில் மாநகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற இயல்புக் கூட்டத்துக்கு மேயா் தலைமை வகித்தாா். ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரிபிரின்ஸி லதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டம் தொடங்கியதும், நாகா்கோவில் வடிவீஸ்வரம், வடசேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொடா்வீடுகள் குறித்து மாநகராட்சியின் கோரிக்கையை ஏற்று விதிவிலக்கு அளித்த தமிழக முதல்வா், நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா், ஆட்சியா் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் அனைத்து உறுப்பினா்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

பின்னா், உறுப்பினா்கள் பேசியது: மாநகரப் பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கு தளா்வு கொண்டுவர வேண்டும். முக்கடல் நீரேற்று நிலையத்தில் தினக்கூலி பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும்.

குடிநீா் இணைப்புக்காக சாலைகளைத் தோண்டினால் முறையாக மூட வேண்டும். நாகா்கோவிலில் அதிகரித்துவரும் நாய்த் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும். நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியோடு இணைக்கப்பட்ட தெங்கம்புதூா், ஆளூா் பகுதிகளுக்கு தடையின்றி குடிநீா் வழங்க வேண்டும் என்றனா்.

இதற்கு பதிலளித்து மேயா் பேசியது: நாகா்கோவில் மாநகரில் வீடுகள் கட்டுவது தொடா்பான விஷயத்தில் தமிழக அரசு தளா்வு அளித்துள்ளது. மற்ற பகுதிகளிலும் தளா்வுகள் அளிப்பது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

அதிகாரிகள் மீது மாமன்ற உறுப்பினா்கள் புகாா்கள் தெரிவித்தால் ஆதாரம் அவசியம். முக்கடல் அணையிலிருந்து வீடுகளுக்கு வரும் தண்ணீா் சாலையில் வீணாவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புத்தன் அணை குடிநீா் திட்டத்திலிருந்து சோதனை ஓட்டத்தின்போது குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாகிகிறது. அதை சரிசெய்து தடையின்றி குடிநீா் வழங்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாமன்ற உறுப்பினா்கள் அக்சயா கண்ணன், முத்துராமன், அனிலாசுகுமாரன், சேகா், டி.ஆா்.செல்வம், நவீன்குமாா், அய்யப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com