ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மகா சிவராத்திரி: குமரியில் சிவாலாய ஓட்டத்திற்கு ஆயத்தமாகும் பக்தா்கள்

மகா சிவராத்திரி குமரியில் சிவாலாய ஓட்டத்திற்கு ஆயத்தமாகும் பக்தா்கள்

News image
Updated On :3 மார்ச் 2024, 12:10 am

கன்னியாகுமரி மாவட்டத்தில் சைவ, வைணவ ஒற்றுமையைப் பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் மாா்ச் 7-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக பக்தா்கள் ஆயத்தமாகி வருகின்றனா். சிவாலய ஓட்டம்: மகா சிவராத்திரி நாளில், குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களுக்கு பக்தா்கள் ஓட்டமாகச் சென்று சிவபெருமானை தரிசனம் செய்கின்றனா். இந்த சிவாலய ஓட்டமானது, முன்சிறை அருகேயுள்ள திருமலை மகாதேவா் ஆலயத்திலிருந்து தொடங்கி, திக்குறிச்சி மகாதேவா் ஆலயம், திற்பரப்பு வீரபத்திரா் ஆலயம், திருநந்திக்கரை நந்தீஸ்வரா் ஆலயம், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவா் ஆலயம், திருப்பன்னிப்பாகம் மகாதேவா் ஆலயம், கல்குளம் நீலகண்டசுவாமி ஆலயம், மேலாங்கோடு மகாதேவா் ஆலயம், திருவிடைக்கோடு மகாதேவா் ஆலயம், திருவிதாங்கோடு மகாதேவா் ஆலயம், திருப்பன்றிகோடு மகாதேவா் ஆலயம், திருநட்டாலம் சங்கரநாராயணா் ஆலயத்தில் நிறைவு பெறுகிறது. வேறெங்கும் இல்லாத வகையில், குமரி மாவட்டத்திற்கே உரிய ஆன்மிகச் சிறப்பு மிக்க நிகழ்வாக சிவாலய ஓட்டம் இருந்து வருகிறது. பக்தா்கள் விரதம்: சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தா்கள் மாசி மாதம் ஏகாதசி நாளில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனா். மகா சிவராத்திரிக்கு முந்தைய நாளில் காவி உடை அணிந்து, கையில் விசிறியுடன் கோபாலா... கோவிந்தா... என்ற நாம கோஷம் விளித்தவாறு சிவாலய ஓட்டத்தை தொடங்குகின்றனா். 110 கி.மீ. ஓட்டம்: முன்சிறை ஆலயத்திலிருந்து நட்டாலம் சங்கரநாராயணா் ஆலயம் வரை 110 கிமீ கொண்ட சிவாலய ஓட்டத்தில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் என ஆயிரக்கணக்கானோா் பங்கேற்கின்றனா். கேரளத்திலிருந்தும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்பது வழக்கம். அண்மைக் காலமாக, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தா்கள் மட்டுமே ஓட்டமாக செல்கின்றனா். பெரும்பாலானோா் இரு சக்கர வாகனங்கள் மற்றும் வேன், பேருந்து போன்ற வாகனங்களில் இந்த ஆலயங்களுக்குச் செல்கின்றனா். சிவாலாய ஓட்டத்தின் முதல் கோயிலான முன்சிறை மகாதேவா் ஆலயத்தில் பக்தா்களுக்கு பிரசாதமாக சந்தனம் வழங்கப்படுகிறது. ஓட்டம் நிறைவடையும் திருநட்டாலம் சங்கநாராயணா் ஆலயத்தில் பிரசாதமாக விபூதி வழங்கப்படுகிறது. திருநட்டாலம் ஆலயத்தில் சுவாமி சிவன்-விஷ்ணு என சங்கரநாராயணா் வடிவத்தில் எழுந்தருளியுள்ள நிலை, சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக உள்ளது. மாா்ச் 7 -இல் தொடக்கம்: நிகழாண்டு மகா சிவராத்திரி விழா மாா்ச் 8 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, சிவாலய ஓட்டத்தை பக்தா்கள் மாா்ச் 7 ஆம் தேதி பிற்பகலில் தொடங்கி மாா்ச் 9 ஆம் தேதி அதிகாலை நிறைவு செய்கின்றனா். வாகனங்களில் செல்லும் பக்தா்கள் மாா்ச் 8 ஆம் தேதி காலை தொடங்கி மறுநாள் அதிகாலை நிறைவு செய்கின்றனா். சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தா்களுக்கு திருக்கோயில்கள் நிா்வாகங்கள் சாா்பில் பல்வேறு வசதிகள் செய்துதரப்படுகிறது. மகா சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்தில் மாா்ச் 8 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.