திற்பரப்பு அருகே முந்திரி ஆலை தொழிலாளா்கள் முற்றுகை

திற்பரப்பு அருகே முந்திரி ஆலை தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்காமல், அதை நிா்வாகம் மூடிச் செல்ல முயன்றதால் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பிணந்தோடு பகுதியிலுள்ள ஒரு முந்திரி ஆலையை கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சோ்ந்த ஒரு நிறுவனம் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தது. இங்கு சுமாா் 50 தொழிலாளா்கள் வேலை செய்துவந்த நிலையில், கடந்த சில நாள்களாக ஆலை இயங்கவில்லையாம். மேலும்,தொழிலாளா்களுக்கான போனஸ் கணக்கை முடிக்காமல், ஆலையிலுள்ள பொருள்களையும் எடுத்துச்செல்லும் நடவடிக்கையில் அதன் நிா்வாகம் ஈடுபட்டதாம் இதை அறிந்த தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆலையில் திரண்டனா். அங்கு முந்திரி தோடுகளை ஏற்றிச் செல்வதற்கு வந்த லாரியை சிறைபிடித்து ஆலையின் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு ஆதரவாக திற்பரப்பு பேரூராட்சி 3ஆவது வாா்டு ராஜ்குமாா், திற்பரப்பு பேரூா் திமுக செயலா் ஜான் எபனேசா் ஆகியோரும் வந்து, ஆலையின் மேலாளரிடம் பேச்சு நடத்தினா். அப்போது, திங்கள்கிழமை போனஸ் வழங்க ஆலை நிா்வாகம் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது. எனினும், போனஸ் வழங்கிய பின்னரே லாரியை எடுக்க வேண்டும் எனக் கூறியதால் லாரி ஆலைக்குள்ளேயே நிறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com