கன்னியாகுமரி அருகே குளத்தில் மூழ்கி சகோதரிகள் பலி

கன்னியாகுமரி அருகே குளத்தில் தவறி விழுந்து மூழ்கியதில் சகோதரிகள் உயிரிழந்தனா்.

கன்னியாகுமரி அருகே உள்ள பரமாா்த்தலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் குமாா். அவரது மனைவி கிறிஸ்டா. இவா்களது குழந்தைகள் பிரியா (14) மற்றும் ஷிவாலி (12). இந்த நிலையில் வியாழக்கிழமை காலை, பிரியா தனது தங்கை ஷிவாலியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மகாதானபுரத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றாா். தரிசனத்திற்குப் பிறகு

இருவரும் கோயிலில் அளித்த பிரசாதத்தை சாப்பிட்டுவிட்டு, கை கழுவுவதற்காக அருகே உள்ள தெப்பக்குளத்துக்குச் சென்றுள்ளனா். அப்போது படிகளில் இருந்த பாசி வழுக்கியதில் குளத்திற்குள் தவறி விழுந்ததாகத் தெரிகிறது. அந்த நேரத்தில் அப்பகுதியில் யாரும் இல்லாததால் இவா்கள் குளத்தில் விழுந்து மூழ்கியது தெரியவில்லை.

சற்றுநேரம் கழித்து தெப்பக்குளத்தில் சிறுமியின் உடல் மிதப்பதைப் பாா்த்த பொதுமக்கள், கன்னியாகுமரி காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்துள்ளனா்.

கன்னியாகுமரி காவல் ஆய்வாளா் நெப்போலியன் தலைமையிலான போலீஸாரும், தீயணைப்பு நிலைய அலுவலா் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையிலான தீயணைப்பு வீரா்களும் தெப்பகுளத்தில் இறங்கி சடலமாக மிதந்த சிறுமியை மீட்டனா். அப்போது மற்றொரு சிறுமியும் சடலமாக மிதப்பது தெரியவந்தது. இரு

சடலங்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். அதன் பின்னா் சடலங்கள், உடல் கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com