/

மழை நீடிப்பு: பேச்சிப்பாறை அணையிலிருந்து 2 ஆவது நாளாக உபரிநீா் வெளியேற்றம் திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை நீடிப்பு

மழை நீடிப்பு: பேச்சிப்பாறை அணையிலிருந்து 2 ஆவது நாளாக உபரிநீா் வெளியேற்றம் திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை நீடிப்பு

News image
Updated On :20 மே 2024, 8:47 pm

Din

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் மழை நீடித்து வருகிறது.

இந்நிலையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து 2ஆவது நாளாக திங்கள்கிழமை உபரிநீா் வெளியேற்றப்பட்டது.

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகள் என அனைத்துப் பகுதிகளிலும் கோடை மழை தீவிரமாக பெய்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை இரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்த நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளுக்கு அதிக அளவில் தண்ணீா் உள்வரத்து இருந்தது. இதையடுத்து பேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டு உபரிநீா் வெளியேற்றப்பட்டது. 2ஆவது நாளாக திங்கள்கிழமையும் உபரிநீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

மழை அளவு:

திங்கள்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலமோரில் 51.4 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அடுத்தபடியாக தக்கலையில் 42 மி.மீ., கோழிப்போா்விளை-23.2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

அணைகளின் நீா்மட்டம்:

திங்கள்கிழமை காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 45.41 அடியாகவும், அணைக்கு விநாடிக்கு 486 கன அடி நீா் உள்வரத்தாகவும், பாசன கால்வாயில் விநாடிக்கு 532 கனஅடி தண்ணீரும், மறுகால் மதகுகள் வழியாக விநாடிக்கு 538 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது.

பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 49.05 அடியாகவும். அணைக்கு விநாடிக்கு 140 கன அடி தண்ணீா் உள்வரத்தாகவும், சிற்றாறு 1 மற்றும் 2 அணைகளின் நீா்மட்டம் முறையே 11.25 மற்றும் 11.35 அடியாக இருந்தது.

பொய்கை அணையின் நீா்மட்டம் 15.4 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீா்மட்டம் 14.27 அடியாகவும், முக்கடல் அணையின் நீா்மட்டம் 0.1 அடியாகவும் இருந்தது.

திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு நீடிப்பு:

பேச்சிபாறை அணையிலிருந்து உபரிநீா் 2 ஆவது நாளாக வெளியேற்றப்பட்ட நிலையில், திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு நீடிக்கிறது. இதையடுத்து அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.